உண்டியல் ஓட்டையில் மர்ம பொருள்..திருச்செந்தூர் அர்ச்சகரின் திருட்டு வேலை! போலீஸ் கொடுத்தது தண்டனையா?
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அர்ச்சகரை சிறையில் அடைக்காமல் போலீசார் சொந்த ஜாமினில் விடுவித்து விட்டு, மற்றொரு நபரை சிறையில் அடைத்ததாக எழுந்துள்ள புகார் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சகருக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு ஒரு நியாயமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக் கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகாரத்தனமாக விளங்கி வருவதால் நாள் ஒன்றுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன் மூலவர் எதிரே உள்ள நூதன முறையில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் ஒருவர் இதே மாதிரி உண்டியல் வாயில் துணி மற்றும் காகிதத்தை வைத்து திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் சுமார் 10,000 ரூபாய் திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் திருமுருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவில் அர்ச்சகர் முருகன் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த போதிலும், தவறு செய்த அர்ச்சகரை சொந்த ஜாமினில் விடுவித்து விட்டு தவறு செய்த ஒருவரை சிறையில் அடைத்தது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் பணியாளர் ஒருவர் டிக்கெட்டில் முறைகேடில் ஈடுபட்டார் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தொடர் விசாரணை நடத்தி அதில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுபோல் கோவிலில் நடைபெறக்கூடிய பல்வேறு முறைகளை முறையாக விசாரித்து அதற்கு காரணமாக இருக்கக் கூடிய மேல்மட்ட அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பெயரளவில் வழக்கு பதிவு மட்டும் செய்துவிட்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பது, முழுமையாக விசாரணை நடத்தாமல் இருப்பது கோவில் நிர்வாகத்திற்கும் வழக்கமாக இருப்பதுன் பக்தர்களுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோவிலில் குற்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள்.




Click it and Unblock the Notifications
