மோடிக்கு நேரு.. விஜய்க்கு திமுக! நிரூபிக்கப்படாத இடி புகார்களை சுட்டிக்காட்டிய முதல்வர் EMPTY பேச்சு
சென்னை: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எந்தவொரு மக்கள் பிரச்சினைக்கோ அல்லது கொள்கை முரண்பாடுகளுக்கோ பதிலளிக்க வேண்டிய சூழல் வரும்போதெல்லாம், உடனே பல பத்தாண்டுகளுக்கு முந்தைய 'ஜவஹர்லால் நேரு' காலத்தைக் கையில் எடுப்பது வழக்கம். "70 ஆண்டுகளாக நேரு செய்த தவறுதான் காரணம்" என்று வரலாற்றைத் தோண்டுவது பாஜகவின் பிரதான உத்திகளில் ஒன்று. அதே பாணியை இப்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கையில் எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புருவங்களை உயர்த்தியுள்ளது.
கடந்த வாரம், "என் மேஜையில் மூன்று முக்கிய ஃபைல்கள் இருக்கின்றன; அதைத் திறந்தால் தாங்க மாட்டீர்கள்" என்று எதிர்க்கட்சியான திமுகவுக்கு எதிராக அதிரடி காட்டினார் முதல்வர் விஜய். ஆளுங்கட்சியின் அதிகாரத்தில் இருக்கும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்துத் திரட்டிய புதிய, வலுவான ஆதாரங்களோடுதான் அவர் அவைக்கு வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், சட்டசபையில் அவர் அவிழ்த்துவிட்டதோ 50 ஆண்டுகளுக்கு முந்தைய சர்காரியா கமிஷன் அறிக்கையையும், மத்திய அமலாக்கத்துறையின் நிரூபிக்கப்படாத பழைய குற்றச்சாட்டுகளையும் மட்டும்தான்.

சாட்சியற்ற பழைய வரலாறு: 'சர்காரியா' அரசியல் யாருக்கு லாபம்?
ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்தது குறித்துப் பேச வந்த முதல்வர், தம்முடைய அரசின் புலனாய்வு ஆவணங்களை முன்வைக்காமல், நேராக 1976-ல் போடப்பட்ட சர்காரியா கமிஷனுக்குச் சென்றார். வீராணம் திட்டத்தில் இரண்டரை சதவீத கமிஷன் பேசப்பட்டது என்று அரை நூற்றாண்டுக்கு முந்தைய கதையை அவர் சட்டசபையில் வாசித்துக் காட்டியது, இன்றைய தலைமுறை அரசியல் களத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர், முந்தைய ஆட்சியில் தவறு நடந்திருக்கிறது என்றால், தம் கைவசம் இருக்கும் அதிகாரப்பூர்வ புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு ஆவணங்களைத் திரட்டி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, 50 ஆண்டுகளுக்கு முந்தைய கமிஷன் அறிக்கையை எடுத்து 'சாம்பிள்' காட்டுவது, ஆட்சி அதிகாரத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. "இன்றைய பிரச்சனைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நேருவைக் குற்றம் சாட்டும் மோடிக்கும், புதிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆண்டு பழைய சர்காரியாவைத் தோண்டும் விஜய்க்கும் என்ன வித்தியாசம்?" என்ற கேள்விதான் தலைமைச் செயலக வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.
நிரூபிக்கப்படாத இ.டி வழக்குகளும் கூட்டணிக் குழப்பமும்!
அடுத்ததாக, திமுக ஆட்சியில் 7.5% முதல் 10% வரை கமிஷன் கைமாறியதாக அமலாக்கத்துறை கூறியிருப்பதை முதல்வர் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமலாக்கத்துறை போடும் வழக்குகளில் தண்டனை விகிதம் எத்தனை சதவீதம் என்பது ஊரறிந்த உண்மை. நீதிமன்றத்தில் இறுதிவரை நிரூபிக்கப்படாத, வழக்குப் பதிவு அல்லது குற்றப்பத்திரிகை அளவிலேயே நிற்கும் இ.டி-யின் முதற்கட்ட அனுமானங்களை ஓர் ஆளுங்கட்சியின் முதல்வர் சட்டசபையில் ஆதாரமாகப் பேசுவது எந்த வகையில் நியாயம்?
இதைவிட விநோதம் என்னவென்றால், இதே அமலாக்கத்துறை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் மீதும் இதேபோன்ற நூற்றுக்கணக்கான புகார்களையும் வழக்குகளையும் அடுக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோ தவெக-வின் கூட்டணி வளையத்தில் இருக்கிறது.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசுகிறார் என்றால், அதே இ.டி தன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளையும் அவர் முழுமையாக ஒப்புக்கொள்கிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எதிர்க்கட்சியை மிரட்ட அமலாக்கத்துறையைக் கையில் எடுப்பதும், அதே சமயம் கூட்டணிக் கட்சிகள் மீதான இ.டி நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அப்பட்டமான இரட்டை வேடம் என்றே விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெற்று பில்டப்... எடுபடாத சாம்பிள்
"மேஜையில் மூன்று ஃபைல்கள் இருக்கிறது" என்று ஒரு வாரமாக உருவாக்கப்பட்ட பில்டப், இறுதியில் பழைய பேப்பர்களின் மறுவாசிப்பாகவே முடிந்துள்ளது. மாநில லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய புதிய புலனாய்வு ஆதாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியைத் திணறடிப்பார் என்று பார்த்தால், மத்திய அமைப்புகளின் நிரூபிக்கப்படாத அறிக்கைகளையே வாசித்து முடித்திருக்கிறார்.
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி அரசியல் செய்வது பிரச்சார மேடைகளுக்குப் பொருந்தலாம்; ஆனால், அதிகாரமும் பொறுப்பும் நிறைந்த சட்டமன்றத்தில், வழக்கமாக ஆதாரங்களின்றி அரைத்த மாவையே அரைப்பது ஆளுங்கட்சியின் அரசியல் முதிர்ச்சியைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறது.


Click it and Unblock the Notifications
