அம்பி, அன்னியன் மாதிரி.. மாற்றி மாற்றி பேசுறாரா? விஜய்யின் பழைய பேச்சை வெளியிட்டு பங்கம் செய்த பாஜக
சென்னை: அன்னியன் படத்தில் நடிகர் விக்ரம், அம்பியாகவும் அன்னியனாகவும் மாறி மாறி பேசுவது போல, முதல்வர் விஜய் மாற்றி மாற்றி பேசுவதாக விமர்சித்து, தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக பேசிய காட்சியையும் தற்போது சட்டசபையில் பேசியதையும் பாஜக ஒப்பிட்டு இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதாக கூட்டணி கட்சிகளே விமர்சிக்க தொடங்கியுள்ளன. கொலை நடைபெறாத நாளே இல்லை என சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெட்டு, குத்து கொலைகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், சட்டசபையில் ஆதாரங்களுடன் அடுக்கக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து, முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கெல்லாம் யார் காரணம்?
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. குற்றச்செயல்களில் இளம் வயதினர் ஈடுபடும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்?
இந்த நிகழ்வுகளைப் பொறுத்தவரை யார் மீது பழி போடலாம் என்று அரசியல் ரீதியாக சிந்திக்கும் எதிர்க்கட்சியினருக்கு இணையாக, நானும் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெற்ற குற்ற சம்பவங்களை புள்ளிவிவரங்களுடன் கூறிவிட்டு ஒதுங்க மனம் இடம் தரவில்லை. அது போன்ற கீழான அரசியலை நாம் செய்வது இல்லை" என்று பேசினார்.
தமிழக பாஜக வீடியோ
தேர்தலுக்கு முன்பாக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடுமையாக அப்போது ஆட்சியில் இருந்த திமுகவை விமர்சித்த விஜய், ஆட்சிக்கு வந்தபிறகு, தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது என மழுப்பலாக பேசுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், விஜய் தேர்தலுக்கு முன்பாக பேசிய காட்சியையும் தற்போது அவையில் பேசியதையும் ஒப்பிட்டு பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளது. தமிழக பாஜக, விஜய் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இடம் பெற்று இருப்பதாவது:-
அன்று:
சட்டம் ஒழுங்கு, அது காணாமல் போய் ரொம்ப நாள் ஆச்சு.. சட்டம் ஒழுங்கு என ஒன்று இருக்கிறதாகவே தெரியலை.. இதெற்கெல்லாம் இந்த கரெப்சன், கபடதாறிகள் அரசு தான் காரணம்..
இன்று:
ஒரு குற்றம் நடைபெற்ற பிறகு அதனை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது.
அன்று:
இவன் வேற.. இந்த விஜய் வேற.. எங்க போனாலும் மக்கள் கிட்ட இந்த சட்டம் ஒழுங்கப் பத்தி பேசி ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கான் என ஸ்டாலின் அவர்கள், கூட இருப்பவர்களிடம் சொல்லி சங்கடப்பட்டாராம்..
இன்று:
ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு குடும்ப பிரச்சனை இருக்கலாம்.. சொத்து தகராறு இருக்கலாம்.. முன் விரோதம் இருக்கலாம்.. போதைப் பொருள் பயன்பாட்டின் தாக்கமாக இருக்கலாம்.
அன்று:
இப்படி சொன்னால் எப்படி சார்.. கேட்கிறவர்கள் எல்லாம் கேசரி சாப்பிடுகிறார்கள் என்று நினைச்சீங்களா?
இன்று:
சட்டத்தின் மீது பயமில்லாதது.. சிலரது ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு.. போன்ற பல்வேறு சமூக காரணிகளும் குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம்.
முதல்வர் விஜய்யின் தேர்தலுக்கு முந்தைய பேச்சையும் தற்போதைய பேச்சையும் ஒப்பிட்டு பாஜக வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
