மின்னல் தாக்கி 11 பேர் பலி... 6 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: விருதுநகர் மற்றும் கள்ளக்குறியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் அறிவித்து உள்ளார்.

விருதுநகரில் 4 பேர் பலி
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "விருதுநகர், சின்ன மூப்பன்பட்டி கிராமம், கருப்பசாமி நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரோசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு அழகுமுத்து என்பவரின் மகன் கார்த்திக் ராஜா, திரு.மதியழகன் என்பவரின் மகன் முருகன், திரு.சக்கரை என்பவரின் மனைவி ஜக்கம்மாள் மற்றும் கெப்பிலிங்கம்பட்டி திரு.செல்வகுமரேசன் என்பவரின் மகன் சூரியா ஆகிய நான்கு நபர்கள் மழையின் காரணமாக ஏற்பட்ட இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் 2 பேர் பலி
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திரு.பிச்சமுத்து என்பவரின் மனைவி ஜெயக்கொடி தென்கீரனூர் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கள்ளக்குறிச்சி மாவட்டம் பண்ருட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு நபர்கள், இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
இந்தத் துயரமான செய்திகளைக் கேட்டு மிகுந்த வேதனையுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மின்னல் தாக்கி மேலும் சிலர் பலி
6 பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண உதவி அளித்திருக்கிறார். ஆனால் மேலும் சிலரும் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாளசிராமணி என்ற கிராமத்தில் கிணறுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணியை செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பழனிவேல், விஜி மின்வாரிய தொழிலாளர்கள் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் ரப்சேல் (47) என்ற மீனவர்கள் உயிரிழந்தார்.

திருச்சுழி, செந்துறையிலும் சோகம்
இதேபோல், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கருப்பாயி (44) என்ற பெண் தொழிலாளியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மாராக்குறிச்சி கிராமத்தில் வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அன்னலட்சுமி (35) என்பவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் மின்னல் தாக்கியதில் காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications