சென்னை வெள்ளம் குறித்து பொய்ப்பிரசாரம்.. மக்களிடம் பீதி ஏற்படுத்தும் நபர்கள்.. டிஜிபி எச்சரிக்கை!
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
Recommended Video
மழை ஓய்ந்து மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில் சிலர் சமூகவலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. சிலர் மற்ற மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை சென்னையில் எற்பட்டதுபோல் அவதூறு பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் மழை பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் கொண்டுவர காவல்துறையினர் மற்றும் பிற அரசு துறையினர் இரவு, பகல் பாராமல் மீட்புப்பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொய் பிரச்சாரம்
இத்தருணத்தில், சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாக கையிலெடுத்துக் கொண்டு பொதுமக்களிடையே மழை, வெள்ளம் குறித்து அச்சத்தையும், பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களிடையே பதட்டம்
மேலும், கடந்த காலங்களில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடைபெற்ற வெள்ள பாதிப்புகளை தற்போது நடைபெற்றது போன்று சித்தரித்து, பின்னணிக் குரல் பதிவுடன் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு, பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது காவல் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயர்
சமூக வலைதளங்களை பயனுள்ள வகையில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயர் உருவாக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக இது போன்ற அவதூறான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்பி வருவது சட்டப்படி குற்றமாகும்.

கடும் நடவடிக்கை
எனவே, இவ்வாறு சமூக பொறுப்பின்றி உண்மைக்குப் புறம்பான இடுகைகளை பதிவிடுவோர் எவராயினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அவர்களது வலைதளக் கணக்குகளை முடக்கவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை கடுமையாக எச்சரிக்கிறது. இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications