ரூ.70,000 ஆஃபரில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த அடிக்குமாடி குடியிருப்பு! - மகிழ்ச்சி மழையில் மக்கள்!
சென்னை : 'தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பா இது?' எனக் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது, அந்தக் கட்டடங்களின் வடிவமைப்பு. 'லிஃப்ட், பார்க்கிங், பூங்கா, மைதானம் என தனியார் குடியிருப்புகளைவிடவும் தரமாக கட்டியுள்ளனர்' என நெகிழ்கின்றனர், குடியிருப்புவாசிகள்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், குடிசை மாற்று வாரியத்தின் பெயரை 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என மாற்றியதோடு விதிமுறைகளையும் மாற்றி இருக்கிறார்.
ஒரு தனியார் கட்டுமான அடுக்குமாடிக் குடியிருப்பில் என்னென்ன வசதிகள் இருக்குமோ அவை அனைத்தும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் உள்ளன.

மு.கருணாநிதியின் கனவு
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்த தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பணிகளை, ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் கட்டிக் கொடுத்திருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
'குடிசைகளில் மக்கள் வசிக்கக்கூடாது. அவர்களுக்கு கான்கிரீட் கட்டடங்களைக் கட்டித் தரவேண்டும்' என்று முதன்முதலாக கனவு கண்டவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அவர்தான் இந்திய அளவில் முன்மாதிரி திட்டமாக 'தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்' என்ற ஒன்றை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார். மாநிலத்தில் உள்ள குடிசைகளை அகற்றுவதுதான் இதன் இலக்காக இருந்தது. 'குடிசைப் பகுதிகளை ஒழித்து சுகாதாரமான குடியிருப்புகளை வழங்க வேண்டும்' என்பதில் மு.கருணாநிதி உறுதியாக இருந்தார்.
முறையான குடிநீர் வசதி, மின் இணைப்பு, சாலைப் போக்குவரத்து என அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டன. தொடக்ககாலங்களில், மீனவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில், குடிசை மாற்றுவாரிய வீடுகள் கட்டப்பட்டன.

புதிய பெயர்; விதிகளில் திருத்தம்
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், குடிசை மாற்று வாரியத்தின் பெயர், 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என மாற்றம் செய்யப்பட்டது. வாரியத்தின் பெயரை மட்டும் முதலமைச்சர் மாற்றவில்லை. விதிமுறைகளையும் மாற்றி இருக்கிறார். இத்திட்டத்தில் வழங்கப்படும் வீடுகள், 'குடும்பத் தலைவியின் பெயரில்தான் வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் குடியிருப்புப் பகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தினை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக, வாரியத்துக்கு ஒன்றிய அரசின் விருதும் கிடைத்துள்ளது.
அந்தவகையில், புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒன்றான சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவிலுள்ள குடியிருப்பு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அங்கு ஏராளமான வசதிகளுடன் குறைந்த விலையில் மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுவும் 70 ஆயிரம் ரூபாய் என்ற சலுகையில் வீடுகள் கொடுக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
தனியார் குடியிருப்புகளுக்கு இணையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் முருகேசனிடம் பேசினோம்.

அன்று 220 சதுர அடி; இன்று 420 சதுர அடி
''தேனாம்பேட்டை வாரியக் குடியிருப்பில் முன்பு ஐந்து பிளாக்குகள் இருந்தன. அதில், 208 வீடுகள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் அவற்றை எல்லாம் இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டிவிடலாம் என முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஒன்பது மாடிகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். அதுவும் பைல் பவுண்டேஷன் போட்டு கட்டி முடித்துள்ளோம். இங்கு இரண்டு பிளாக்குகளில் மட்டும் தாங்குதளம் அமைத்து ஒன்பது மாடியுடன் கூடிய பல மாடிக் கட்டடமாக வடிவமைத்துள்ளோம்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய முருகேசன், ''குடியிருப்புகளைக் கட்டுவதற்கு முன்பாக, ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்களால் வடிவ முன்வரைவு செய்யப்பட்டு, பின்னர் கட்டடம் கட்டப்பட்டது. முன்பு இருந்த வீடுகள் 220 முதல் 270 சதுர அடி வரையில் இருந்தன. இதனால், குடியிருப்புவாசிகளுக்கு இடநெருக்கடி இருந்தது. தற்போது 420 சதுர அடியில் வீடுகளைக் கட்டித் தந்துள்ளோம். அனைவரும் குடியேறிவிட்டார்கள்" என்கிறார்.
இதே குடியிருப்பில் வீடு வாங்கி வசித்து வருகிறார் எல்லம்மாள். அவர் நம்மிடம் பேசுகையில், ''முன்பைவிட இடவசதியை அதிகப்படுத்திக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். வீட்டில் அதிக ஜன்னல்களை வைத்துக் கட்டியிருப்பதால் காற்றோட்டம் நன்றாக உள்ளது. வராண்டா, வரவேற்பறை என அனைத்தும் முன்பைவிட வசதியாக உள்ளது" என்கிறார்.
இவருக்கு அடுத்த பிளாக்கில் வசிக்கிறார், ஹரி என்பவர். அவர் பேசுகையில், "முன்பு இருந்த வீட்டில் ஒரே அறையில் அனைவரும் படுத்து உறங்குவோம். படிப்பதற்கும் வேறு சில உபயோகங்களுக்கும் பெரிய இடைஞ்சலாக இருக்கும். இந்த நெருக்கடியில்தான் குழந்தைகள் வளர்ந்தார்கள். அவர்கள் இப்போது வளர்ந்துவிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல இடவசதியை அதிகப்படுத்திக் கட்டிக் கொடுத்துள்ளனர்'' என்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த சலுகை
மேலும், '' இந்த வீட்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாயை அரசு நிர்ணயித்து இருந்தது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் 70 ஆயிரம் ரூபாய் வரையில் குறைத்து 88,500 ரூபாய் மட்டும் வாங்குவதற்கு உத்தரவிட்டார். இதனால் எங்களின் நிதிச் சுமை பாதியாக குறைந்தது. முதலமைச்சரின் கருணை உள்ளத்தால் நாங்கள் தப்பித்தோம்" என்கிறார் ஹரி.
''முன்பு இங்கு லிஃப்ட் வசதியெல்லாம் இல்லை. இப்போது ஒன்பது மாடி என்பதால் லிஃப்ட் போட்டுத் தந்துள்ளனர். இரண்டு அறைகள் உள்ளதால் பெண் பிள்ளைகள் உடை மாற்றவும் வசதியாக உள்ளது. அனைத்து வீட்டுக்கும் தனித்தனி பார்க்கிங் வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு தனியார் கட்டுமான அடுக்குமாடிக் குடியிருப்பில் என்னென்ன வசதிகள் இருக்குமோ அவை அனைத்தும் இங்கு உள்ளன. குறிப்பாக, குழந்தைகள் விளையாடுவதற்குத் தனியாக மைதானமும் பூங்காவும் உள்ளன" என உற்சாகப்படுகிறார், இதே குடியிருப்பில் வசித்து வரும் பெண்மணி ஒருவர்.
இங்குள்ள ஒவ்வொரு பிளாக்கிலும் 162 வீடுகள் என மொத்தம் 324 வீடுகள் உள்ளன. போக்குவரத்து மற்றும் தீயணைப்புக்கு ஏற்றவகையில் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதில், இன்னொரு முக்கியமான விஷயம், ஒவ்வொரு பிளாக்குக்கும் 2 லிஃப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று பழுதானாலும் மற்றொன்று இயங்குவதைப் போன்று முன்கூட்டியே திட்டமிட்டுக் கட்டியுள்ளனர்.
"குடியிருப்பில் லிஃப்ட் இருப்பது பெரிய வசதியாக உள்ளது. ஒரு லிஃப்டில் நாங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ற அளவில் இடவசதி உள்ளது. இன்னொரு லிஃப்டில் பொருள்களை ஏற்றி இறக்கும் வகையில் வசதி உள்ளது. இப்படியொரு குடியிருப்பைக் கட்டிக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி'' என்கிறார், இங்கு வசிக்கும் அலமேலு என்ற பெண்மணி.

பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி
தேனாம்பேட்டையில் குடியிருப்பை மட்டும் அரசு கட்டித் தரவில்லை. இங்குள்ள பெண்களுக்கு சுய உதவிக்குழு மூலம் கடன் அளிக்கப்பட்டு வியாபாரம் செய்யவும் அரசு கற்றுத் தருகிறது. மேலும், மகளிருக்கு தையல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்களைக் கணக்கிட்டு, அவர்களின் வசதிக்கு ஏற்ப வங்கிக் கடன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு வழங்கப்பட்ட தையல் பயிற்சி மூலம் பொன்னரசி என்பவர், நல்ல வருமானத்தைப் பெற்று வருகிறார்.
அவர் நம்மிடம் பேசுகையில், "ஒருமுறை லிஃப்டில் பயணிக்கும்போது கரண்ட் கட் ஆகிவிட்டது. அப்போது பயந்துவிட்டோம். ஆனால், அதற்கென தனியே ஜெனரேட்டர் வைத்துள்ளதையும் பிறகுதான் அப்போதுதான் தெரிந்து கொண்டோம். எங்களுக்கு 9 ஆவது மாடியில் வீடு கொடுத்துள்ளனர். ஆனாலும் பயமில்லாமல் லிஃப்ட்டைப் பயன்படுத்துகிறோம். அதை இயக்குவதற்கு தனியாக ஆள்களை நியமித்துள்ளனர். எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை" என்கிறார் பொன்னரசி.

நம் குடியிருப்பு; நம் பொறுப்பு
அடுத்ததாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி அலுவலர் மஞ்சுவிடம் பேசினோம். "இந்தக் குடியிருப்பில் 'நம் குடியிருப்பு; நம் பொறுப்பு' என்றொரு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் இங்கு வசிப்பவர்கள் இடையே நலச் சங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்மூலமாக, இங்கு வசிப்பவர்களே இந்தக் குடியிருப்பை நிர்வகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு மாதம் 750 ரூபாய் பெறப்படுகிறது. அதேபோல், இம்மக்களின் நலனுக்காக மாதம் 750 ரூபாயை அரசு வழங்கும். அந்தத் தொகையை வைத்து இந்த வீடுகளை நிர்வகிப்பது அங்குள்ள சங்கத்தின் பொறுப்பு.
இந்தத் தொகையை முதலில் எல்லா வீடுகளிலிருந்தும் முழுமையாகப் பெறுவதற்கு முன்னோட்டமாக அரசு மூன்று மாதத்துக்கான தொகையை வழங்கியுள்ளது" என்கிறார்.
இந்தியாவின் நிதி மையம் (financial center) என அழைக்கப்படும் மும்பையில்கூட குடிசைகள் முற்றாக ஒழிந்தபாடில்லை. ஆனால், சென்னை விதிவிலக்காக உள்ளது. குடிசைகள் இல்லாத சென்னையை விரைவில் ஒரு தலைமுறை தரிசிக்க உள்ளது. அந்தவகையில், இந்திய அளவில் தனித்துத் தெரியும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications