ஆகா.. ஆப்பு வச்சுட்டாரே சிஎம் விஜய்! அரசு ஊழியர்களின் பென்ஷனுக்கு செக்! பொங்கிய தலைமைச் செயலக சங்கம்
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி சுமார் 14,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய திமுக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடான 11,000 கோடி ரூபாய் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் அறிக்கையில்," 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் முதலாவது நிதிநிலை அறிக்கையானது கடந்த 05-08-2026 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய கால பலன்களுக்கு ஒதுக்கீடானது ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழகத்திலுள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழக வெற்றிக் கழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த வேளையில், நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடு என்பது ரூ.14,000 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்பது பேரதிர்ச்சியாக உள்ளது.
முதற்கண் இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பாக கடுமையான ஆட்சேபனையினைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓய்வூதியத்திற்கான நிதி குறைப்பில், ஏற்கனவே முந்தைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதிளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடான ரூ.11,000 கோடி என்பது முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், பல்வேறு இனங்களில் மேலும் ரூ.3,000 கோடி அளவுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் நலனில் முழுமையாக கவனம் கொண்டு செயலாற்றி வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஓய்வூதிய காலப் பலன்களில் ரூ.14,000 கோடி அளவுக்கு நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டிருப்பதற்கான விளக்கத்தினை தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்து, தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் வாழ்நாள் கனவான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பினையும் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது." என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
