இன்று புனித வெள்ளி : தமிழகம் புதுச்சேரி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - சிலுவைப்பாதை ஊர்வலம்
சென்னை: புனித வெள்ளி தினத்தை இன்று கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இன்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று மவுன ஊர்வலம் சென்றனர்.

கிறிஸ்துவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சாம்பல் புதனன்று தொடங்கியது. 40 நாட்கள் தவக்காலத்தை தொடங்கினர் கிறிஸ்தவ பெருமக்கள். தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது. கடந்த 5 நாட்களும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

ஏசு சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக உள்ளதுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்றார். இந்த நாளே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை நினைவுகூரும் வகையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆண்டு தோறும் பெரிய வியாழன் நிகழ்ச்சியில் பங்குத்தந்தையர்கள், சீடர்களின் பாதத்தை கழுவி முத்தமிடுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதை தொடர்ந்து திவ்யநற்கருணை வழங்கப்பட்டது.
இன்று பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவைகள் கலையரங்கில் நடைபெறுகிறது. பின்னர் ஏசுவின் உருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பேராலய மேல் கோவிலுக்கு பவனியாக எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
4ஆம் தேதி ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. புதுச்சேரியில் பழமைவாய்ந்த நெல்லித்தோப்பு வின்னேர்பு அன்னை ஆலயத்தில் தந்தை வின்சென்ட் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில் பங்குதந்தை சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.
சிலுவைப்பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். இதே போல் புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.