ஹாப்பி பர்த் டே! தமிழகத்தை மையம் கொண்ட இசைபுயல் ஏஆர் ரகுமான்! தமிழுக்காக செய்த வேற லெவல் சம்பவங்கள்!
சென்னை : தமிழ் திரையுலகில் டிஜிட்டல் இசை மூலம் புரட்சியை ஏற்படுத்திய இசை புயல் ஏ ஆர் ரகுமான் இன்று பிறந்தநாள் காண்கிறார். திரைத்துறையை தாண்டி தமிழ் மொழி மீது மாறா பற்று கொண்ட அவர் உலக அளவில் தமிழுக்காக பல சம்பவங்களை செய்திருக்கிறார்.. அப்படி அவர் செய்த சம்பவங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
70 தொடங்கி 90 வரையிலான காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் இளையராஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் சில இசையமைப்பாளர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலம் அது.
பாரம்பரிய இசை வடிவம் தாண்டி இளையராஜா கொடுத்த மண் சார்ந்த இசையை மக்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்த காலம் அது. வருடத்திற்கு ஆயிரம் படங்கள் வெளியாகிறது என்றால் அதில் 900 படங்கள் இளையராஜாவின் இசையை சுமந்து வந்தவை.

ஏ ஆர் ரகுமான்
அப்போதுதான் 90 கால கட்டங்களில் ஒரு சிறு பையன் இசை உலகில் அடி எடுத்து வைத்தான். ஆனால் அவன் தான் தமிழுக்கான முதல் ஆஸ்கார் விருதை அதுவும் ஒன்றல்ல இரண்டை கொண்டு வருவான் என்று அப்போது யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ரோஜா படத்தில் ஏ ஆர் ரகுமானை அறிமுகம் செய்து பாக்கியத்தை தேடிக் கொண்டவர் இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர். மேடையில் அவரை அறிமுகப்படுத்தும்போது ஒரு பெரிய மனிதர் ஒரு பெரிய மனிதர் என்று பலமுறை அழுத்தி சொல்லி சிறுவன் போல் இருந்த ஏ ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை பழமையான இசையில் மூழ்கிக் கிடந்த ரசிகர்கள் ரோஜாவில் வந்த டிஜிட்டல் இசையை கேட்டு இறங்கித்தான் போனார்கள்.

தமிழுக்கு மரியாதை
புது வெள்ளை மழை பாடலுக்கு முன்பு வரும் பிஜிஎம் தற்போது வரை மனதுக்கு நெருக்கமாக பலருக்கு இருந்திருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான இசையை கொடுத்து தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் என முத்திரை பதித்தார் ஏ ஆர் ரகுமான். இசையைத் தாண்டி தாய்மொழி தமிழ் மீது அளப்பரிய பற்று கொண்ட அவர் ஆஸ்கர் ஆஸ்கர் மேடையாக இருந்தாலும் உள்ளூர் மேடையாக இருந்தாலும் தமிழுக்கு தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பவர்.

தாய் மண்ணே வணக்கம்
அந்த வகையில் வந்தே மாதரம் பாடலை தாய் மண்ணே வணக்கம் என கொண்டு வந்து அதனை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்ததில் ஏ ஆர் ரகுமான் மட்டுமே முழு பங்கையும் வகிக்கிறார். வந்தே மாதரம் பாடலை தற்போது வரை கூட பலரால் முழுமையாக பாட முடியாது. காரணம் மொழிச்சிக்கல். அதனை தாய் மண்ணே வணக்கம் என மாற்றி தமிழ் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். மா துஜே சலாம் என இந்தியில் அந்தப் பாடல் ஹிட் அடித்தது யார்யா இவரு என பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.

இந்தி திரையுலகம்
பாலிவுட் படங்களை தொடர்ந்து ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக சிண்டிகேட் அமைத்து தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இசையமைப்பாளர்களும் செயல்பட்ட காலம் அது. தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை தரும் ஏ ஆர் ரகுமான் இந்தி படங்கள் என்று வந்தால் ரீமிக்ஸ் செய்து தப்பித்துக் கொள்வதாக புகார் எழுந்தது. அதற்கு ஏ ஆர் ரகுமான் உறுதியாக சொல்வதற்கு ஒரு காரணமும் இருந்தது. ஏ ஆர் ரகுமான் கொடுத்த பல மெட்டுக்களை இந்தி திரையுலகினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தமிழ் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற பாடல்களை இந்தி மொழிக்கு கொடுத்திருக்கிறாரே தவிர இந்தி பாடல்களை ஒருபோதும் தமிழ் மொழிக்கு அவர் தந்ததில்லை. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கொடுத்த 'பரம சுந்தரி' பாடல் அதுவரை இந்தி ரசிகர்கள் கேட்டிராதது. இதை அடுத்து மீண்டும் அவர்கள் ஏ ஆர் ரகுமானை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

எல்லா புகழும் இறைவனுக்கே
ஆஸ்கார் மேடையை ஏ ஆர் ரகுமான் மட்டுமல்ல உலகெங்கும் வசிக்கும் தமிழர்களும் மறந்துவிட முடியாது ஸ்லம்டக் மில்லினியர் படத்துக்கு இரு ஆஸ்கார் விருதுகளை கையில் ஏந்தி பேசிய ஏ ஆர் ரகுமான் ஒரு சில வரிகளை ஆங்கிலத்தில் பேசினார். அதற்கு அடுத்து எனது தாய் மொழியில் சில வார்த்தைகளை கூற விரும்புகிறேன் எனச் சொல்லிவிட்டு 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என கூறினார். ஆஸ்கார் மேடையில் கூட தமிழை வைத்து அழகு பார்த்தவர் ஏ ஆர் ரகுமான் என உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

தமிழணங்கு
கோடை வெயிலுக்கு இணையாக இந்திய எதிர்ப்பு தகித்துக் கொண்டிருந்த காலம் அது. அமித் ஷா பொதுவான மொழியாக இந்தி தேவை என பேசியது. இந்தியா முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தூண்டிவிட்டது. தமிழக அளவில் தலைவர்களும் பிரபலங்களும் தங்கள் இந்தி எதிர்ப்பை தெரிவித்து வந்த அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் பாரதிதாசனின் 'இன்பத் தமிழ் எங்கள் ஊரில் உரிமைசெப் பயிருக்கு நேர்' என்ற வரிகளை பதிவிட்டு ழகரம் ஏந்திய தமிழனங்கு புகைப்படத்தை வெளியிட்டார். அது அப்போதைக்கு மிகப்பெரிய சம்பவமாக கருதப்பட்டது. ஆக்ரோஷமான தமிழ் தாயை அதுவரை கண்டிராத தமிழ் சமூகம் அதனை கொண்டாடி ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழனாக பெருமை
இது மட்டுமல்ல ஐஃபா மேடையில் "சிறந்த நடிகருக்கான விருது" என தமிழில் பேசியது, 99 சாங்ஸ் பட விழாவில் தொகுப்பாளினி இந்தியில் பேசியதால் மேடையை விட்டு இறங்கி சென்றது என பல சம்பவங்களை தமிழுக்காக செய்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். எப்போதும் அவர் தமிழை விட்டுக் கொடுத்ததில்லை. தான் ஒரு தமிழன் என்பதை எப்போதும் அவர் மறந்ததும் கிடையாது. தமிழே தெரியாதவர்கள் மேடையில் இருந்தாலும் அங்கே தமிழை பதிவு செய்திருக்கிறார் .தமிழ் பிரச்சினைகள் பலவற்றுக்காகவும் குரல் கொடுத்திருக்கும் ஏ ஆர் ரஹ்மானை வாழ்த்துவதில் தமிழனாக அனைவரும் பெருமை கொள்வோம்..












Click it and Unblock the Notifications