எதிர்ப்பை மீறி.. தமிழகத்தின் 24 சுங்கச் சாவடிகளில் உயர்த்தப்பட்டது கட்டணம்.. டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை 12 மணிக்கு மேல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
Recommended Video
ஒரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இன்னொருபக்கம் சிலிண்டர் விலை உயர்வு, இன்னொருபக்கம் சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்று பல நெருக்கடிகளில் மக்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சுங்க கட்டணம் உயர்த்தப்பட போவதாக தகவல்கள் வெளியானது முதல் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆயினும் சுங்க கட்டணம் தடாலடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு
சுங்க கட்டணம் உயர்வால் தனி நபர் வாகனங்களான கார் போன்றவற்றை இயக்குபவர்களுக்கு கட்டணம் உயருவதோடு, சரக்கு வாகனங்களுக்கு டோல் கட்டணம் அதிகரித்தால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயரும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி ஏறிவிட்ட நிலையில், டோல் கேட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

20 ரூபாய்
ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் குறைந்தது ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சம் 20 ரூபாய் வரை கட்டணங்கள் உயர்ந்து இருக்கின்றன. பாஸ்டாக் கட்டாயம் என்பதால், வாகன ஓட்டிகள் கையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுப்பது கிடையாது. இதனால் எவ்வளவு பணம் கூடுதலாக எடுக்கப்படுகிறது என்பது அவர்களுக்கு உடனடியாக தெரிவது கிடையாது. எஸ்எம்எஸ் மூலமாக பிறகு மெசேஜ் வரும்போதுதான் அது பற்றி தெரிகிறது. இதைபார்த்த பிறகு, வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள்.

எந்தெந்த சுங்கச் சாவடிகள்?
ஆத்தூர் (தாம்பரம்-திண்டிவனம்)
நல்லூர் (சென்னை - தடா)
பரனூர் (தாம்பரம்- திண்டிவனம்)
சூரப்பட்டு (சென்னை பைபாஸ்)
வானகரம் (சென்னை பைபாஸ்)
வாணியம்பாடி (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)
கிருஷ்ணகிரி (ஓசூர்-கிருஷ்ணகிரி)
லம்பலக்குடி (திருச்சி-காரைக்குடி)
லட்சுமணப்பட்டி (திருச்சி-காரைக்குடி)
போகலூர் (மதுரை-ராமநாதபுரம்)
நாங்குநேரி (நெல்லை-அஞ்சுகிராமம்)
பூதக்குடி (திருச்சி பைபாஸ்-தோவரங்குறிச்சி-மதுரை)
பழையா (கந்தர்வகோட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை)
பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)
சித்தம்பட்டி (திருச்சி பைபாஸ், தோவரங்குறிச்சி-மதுரை)
பட்டரைப்பெரும்புதூர் (திருப்பதி-திருத்தணி-சென்னை)
புதுக்கோட்டை (வாகைக்குளம்) (திருநெல்வேலி-தூத்துக்குடி)
எஸ் வி புரம் (திருப்பதி-திருத்தணி-சென்னை)
சாலைப்புதூர் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)
செண்பகம்பேட்டை (திருமயம்-மானாமதுரை)
எட்டூர்வட்டம் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)
திருப்பாச்சேத்தி (மதுரை-ராமநாதபுரம்)
கணியூர் (செங்கப்பள்ளி-கோவை பைபாஸ்)
கப்பலூர் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி) இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன்
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது: பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்கள் தலையில் அடுத்தடுத்த சுமையை ஏற்றுவது வேதனைக்குரியது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications