ஆளுநர் அர்லேகருடன் டிடிவி தினகரன் திடீர் மீட்டிங்! சந்திப்பு முடிந்த கையோடு பரபர பேட்டி
சென்னை: தமிழக ஆளுநர் அர்லேகரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென சந்தித்து பேசியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற டிடிவி தினரகன் அர்லேகரை சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். மேலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது என்று கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் பொறுப்பேற்றுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:- வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழ்நாட்டை மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கு பதிலாக தமிழ்நாடு இன்றைக்கு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதை முதல்வர் விஜய் உணராவிட்டால் இந்த அகம்பாவம், ஆணவம் எல்லாம் உங்களை உறுதியாக வீழ்த்திவிடும்.
பல்வேறு மாற்றங்களை கொடுக்கப் போவதாக சொல்லிவிட்டு இப்போது தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி செல்லும் மாற்றத்தை தான் கொடுத்து இருக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரத்தை தவெகவினரே செய்துகொண்டு இருக்கிறார்கள். போலீஸ் துறை அவங்க வேலையை செய்யாமல், இவர்கள் தவெகவினர் ஏவி விடுகின்றவர்களை கைது செய்வதற்கான வேலையை செய்வது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
இந்த ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு போய்விட்டது. இதனை தமிழக அரசு சீர் செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் அது பற்றி பேசுகிறவர்களை எல்லாம் கைது செய்கிறார்கள். சினிமாவில் வருகின்ற மாதிரி விஜய் அவர்கள் மிரட்டி பார்க்கிறார்கள். அதற்கெல்லாம் தமிழ்நாட்டில் யாரும் பயப்பட மாட்டார்கள். தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திரா பக்கம் சென்றுகொண்டிருகிறது. இவர்கள் எல்லாரிடமும் ஆணவத்துடன் இருப்பது போல் தொழில் முதலீட்டாளர்களுடனும் ஆணவத்தோடு இருக்கின்றனர்.. என்று கூறினார்.
ஏற்கனவே அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ காமராஜ் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமா உள்ளிட்ட விவகாரத்தில் தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆளுநர் அர்லேகரை இருமுறை நேரில் சந்தித்து டிடிவி தினகரன் மனு அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
