இதுதான் SIR-ஐ எதிர்ப்பதா? பாஜக, ஞானேஷ் குமார், மோடி பெயரைக் கூட உச்சரிக்காத தவெக அமைச்சர் ராஜ்மோகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார். இன்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக, மோடி, ஞானேஷ் குமார், அமித் ஷா உள்ளிட்டோரின் பெயர்களையே பயன்படுத்தாமல் பேசி முடித்தார் அமைச்சர் ராஜ்மோகன்.

சென்னை எழும்பூரில் இன்று SIR பணிகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

TVK Rajmohan Skips Mention of BJP Modi Gyanesh kumar in INDIA Bloc Protest Speech

அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "எஸ்.ஐ.ஆர் என்ற நடைமுறை இந்தியாவின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என்பது எங்களுக்குப் பழக்கமே கிடையாது. நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பிருந்தே இந்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் அல்ல.. பீகாரில் எஸ்.ஐ.ஆர் திணிக்கப்பட்டபோதே அதை எதிர்த்த கழகம் தமிழக வெற்றிக் கழகம் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறேன். முதல் சுற்றிலேயே 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டபோது நாங்கள் அதைக் கண்டு அதிர்ந்தோம். அதை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டோம். மக்கள் மன்றத்தில் பேசினோம்.

வழக்கு தொடுத்தோம்

ஏன், இந்தியாவினுடைய தலையெழுத்தைத் தீர்மானிக்கக்கூடிய கடைக்கோடி இந்தியனின் கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி அதற்காக வாதாடி வருகிறோம். இந்த 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதும், பின்னர் சேர்க்கப்பட்டதும் போன்ற நடவடிக்கைகள் எப்போதெல்லாம் எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் நடைபெற்றதோ, அப்போதெல்லாம் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துச் சொல்லி வருகிறோம்.

நாங்கள் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள். ஒரே உரிமைக் குரலுக்காக ஓங்கி ஒலிக்கக்கூடிய இரட்டைக் குழல் துப்பாக்கியாக அண்ணன் மாணிக்கம் தாகூரோடு நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். ஜனநாயகம் என்பது ஒரு ஆட்சி முறை மட்டும் இல்லை. அது அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழக்கூடிய வாழ்க்கை முறை என்று அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார்.

அதிகமாக வென்றிருப்போம்

நம் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாக்குரிமையும் அவர்களுக்கான அனைவரையும் உள்ளடக்கிய அந்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் நாங்களும் அடக்கம். குறிப்பாக 30 வயதுக்குட்பட்டவர்கள், பெண்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஏழை எளிய மக்கள், சாமானியர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆகியோரைத் திட்டமிட்டு இந்த எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கம் செய்திருக்கிறார்கள்.

ஒருவேளை இந்தப் பெண்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஏழை மக்களும் முதல்முறை வாக்காளர்களும் நீக்கப்படாமல் இருந்திருந்தால், இன்னும் அதிக இடங்களில் அதிக பெரும்பான்மையோடு தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.

அன்றும் எதிர்த்தோம், இன்றும் எதிர்க்கிறோம்

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைப் பொறுத்தவரை நாங்கள் அன்றும் எதிர்த்தோம். இன்றும் எதிர்க்கிறோம். இப்படி ஒன்றுபட்டு நிற்கக்கூடிய இந்த முன்னணியைப் பார்க்கும்போதே என் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறது. இங்கிருக்கக்கூடிய ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த தோழர்களும் அவர்களுடைய கொடியை ஓங்கிப் பிடித்து வீரநடை போட்டு வருகிறார்கள்.

மக்களுக்காக அவர்கள் போராடுகிறபோது, எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகிறபோது எத்தனை மகிழ்ச்சி வருகிறதோ, அதேபோல இந்தப் பலவண்ணக் கொடிகளும் ஒன்றாகச் சேர்ந்து தலைவர்கள் முன்னால் ஓங்கி உயர்ந்து வானத்தைத் தொடுகிறபோது உண்மையிலேயே எனக்கு நெஞ்சம் நெகிழ்கிறது. இந்த ஒற்றுமை தொடர வேண்டும். மக்களின் உரிமைகளை மீட்பதற்காக எழுந்திருக்கக்கூடிய இந்த ஒற்றுமை தொடர வேண்டும்" எனப் பேசினார்.

பேச்சில் ஹைலைட்

அமைச்சர் ராஜ்மோகன் இன்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக, மோடி, ஞானேஷ் குமார், அமித் ஷா உள்ளிட்டோரின் பெயர்களையே பயன்படுத்தாமல் பேசி முடித்தார். இதுதான் நீங்கள் பாஜகவை எதிர்க்கும் லட்சணமா? என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தொண்டர்களும், தத்தம் கட்சி கொடிகளுடன் பங்கேற்றிருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சிக் கொடியே காணவில்லை. ஒரிருவர் மட்டுமே தவெக கொடியுடன் நின்றனர். தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றிருந்தும், தவெக கொடியையே பெரிதாக பார்க்க முடியவில்லை.

SIR மூலம் பலன் பெற்ற தவெக?

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் தவெக பலன் பெற்றதாக ஒரு கருத்து உள்ளது. அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிகளவில் வென்றதும், குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தவெக குறைவாகவே வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+