விஜய்க்கு தேர்தல் விதிமுறை கூட தெரியாதா? நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மாற்று கட்சித் தலைவர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியல் மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தையும் சட்ட சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

தேர்தல் களத்தின் அடிப்படைக் கட்டமைப்பு, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் ஆணைய சட்டப் பிரிவுகளைப் பற்றிப் போதிய புரிதல் இல்லாமல் த.வெ.க தலைமை செயல்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

vijay

5 முனைப் போட்டி நிலவும் இடைத்தேர்தல் களம்

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் ஆகிய இரு தனித்தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில்:

ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம்
பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க
அ.தி.மு.க
நாம் தமிழர் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சிகள்

என பல முனைப் போட்டி நிலவுகிறது.

இதில் ஆளும் த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் (பட்டியலை த.வெ.க தலைமை முறைப்படி தயாரித்துத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையமும் அந்தப் பட்டியலை அங்கீகரித்து வெளியிட்டது. ஆனால், அந்தப் பட்டியலில் உள்ள பெயர்கள்தான் தற்போது பூதாகரமான சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய அந்தப் பட்டியலில் என்ன இருக்கிறது?

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள த.வெ.க-வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான ஜோசப் விஜய் பெயர் முதலாவதாக இடம்பெற்றுள்ளது. ஆனால், ஆச்சரியமளிக்கும் விதமாக, த.வெ.க-வின் 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி'யில் உள்ள பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரது பெயர்களும் த.வெ.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கியத் தலைவர்கள்:

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மதிமுக எம்.பி துரை வைகோ
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்
விசிக எம்.பி ரவிக்குமார்
விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன்

கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயரிலேயே நட்சத்திரப் பேச்சாளர்களாகக் குறிப்பிட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே பெயரில் அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 77 சொல்வது என்ன?

தேர்தல் அரசியலில் ஒரு பாமரருக்குக்கூடத் தெரிந்த மிக எளிய விதியை ஆளும் கட்சியின் தலைமை எப்படித் தவறவிட்டது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 77 நட்சத்திரப் பேச்சாளர்கள் குறித்து மிகத் தெளிவான வரையறை உள்ளது:

கட்சி சார்ந்த உரிமை: ஒரு அரசியல் கட்சி தனது சொந்தக் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் அல்லது நிர்வாகிகளை மட்டுமே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நட்சத்திரப் பேச்சாளராகப் பட்டியலிட முடியும்.

செலவு கணக்கு விதி: ஒரு கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்யும்போது, அவருடைய பயண மற்றும் பிரசாரச் செலவுகள் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தனிப்பட்ட தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாமல், கட்சியின் பொதுச் செலவுக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கூட்டணிக் கட்சி வரம்பு: ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவர், கூட்டணிக் கட்சியின் பெயரில் நட்சத்திரப் பேச்சாளராக வர முடியாது. அவ்வாறு பிற கட்சியைச் சேர்ந்த ஒருவர் வந்து பிரச்சாரம் செய்தால், அதற்கான முழுச் செலவும் வேட்பாளரின் தேர்தல் வரம்புக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

சட்டம் இவ்வளவு துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும்போது, வேறு கட்சிகளில் பொறுப்பு வகிக்கும் தலைவர்களைத் தங்கள் கட்சியின் பேச்சாளர்கள் போல த.வெ.க பட்டியலிட்டிருப்பது அடிப்படை அரசியல் அறிவின்மையையே காட்டுகிறது என்ற விமர்சனம் வலுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மீதும் எழும் கேள்விகள்

இந்த விவகாரத்தில் த.வெ.க-வை விடத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் மீதே அதிக கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரு புதிய அரசியல் கட்சி இதுபோன்ற சட்ட அறியாமையால் தவறு செய்தாலும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் விதிகளின்படி அதைச் சரிபார்த்து நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், எந்தவித கேள்வியும் இன்றி பிற கட்சிகளின் தலைவர்களை த.வெ.க-வின் பேச்சாளர்களாக ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் சான்றளித்திருப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளையே கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்திருக்கிறது என சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

புதிதாக ஆட்சி அமைத்து, முதல் இடைத்தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் ஒரு கட்சி, ஆரம்பத்திலேயே தேர்தல் நடைமுறைகளில் சறுக்கியிருப்பது கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வருவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.. ஆனால் சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவர்களைத் தங்கள் கட்சியின் பெயரிலேயே பட்டியலிட்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வலுவான அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், இந்தச் சர்ச்சை த.வெ.க வேட்பாளர்களின் தேர்தல் களப்பணியில் எந்தவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+