குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஜய் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இப்போதுவரை விஜய்க்கும் பொதுக்கூட்டத்திற்கும் ராசியில்லை. உரிய பாதுகாப்பு இல்லை என கூறி விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை ரத்து செய்து பனையூர் சென்றுவிட்டார். அவருக்காக காத்திருந்த ரசிகர்கள் தவெக மற்றும் விஜய்யை திட்டி தீர்த்துள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். விஜய் மதியம் பெரம்பூரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கு தேர்தல் விதிகள், காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி தவெகவினர் முண்டியடித்து ஓடி அசம்பாவிதம் செய்தனர். அதன் பிறகு நடந்த விஜய்யின் கொளத்தூர் பிரச்சாரத்திலும் இதே நிலை தான். கொளத்தூருக்கு பிறகு விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

வில்லிவாக்கம் விஜய் பிரச்சாரம் ரத்து
ஆனால் கொளத்தூரில் காவல்துறை விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்காததால் தவெகவினர் கடைசி நேரத்தில் விஜய்யின் வில்லிவாக்கம் பிரச்சாரத்தை ரத்து செய்தனர். இதனால் விஜய் வில்லிவாக்கம் வராமல் பனையூர் சென்றுவிட்டார். விஜய்யை பார்ப்பதற்காக அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
தவெக கூட்டத்திற்கு வந்து காத்திருந்த பெண்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அவரைப் பார்ப்பதற்காக தானே நாங்கள் ஆசை ஆசையாய் வந்து நிற்கிறோம். ஒரு நிமிடம் வந்து பார்த்து சென்றால் என்னவாம். எங்கள் அண்ணனை பார்க்க எங்களுக்கு ஆசையாய் இருக்காதா. எல்லாம் திமுக சதி தான் காரணம். நாங்கள் ரொம்ப நேரமாக காத்திருக்கிறோம். வெயிலில் பல மணி நேரம் கால் கடுக்க நின்றும் விஜய் எங்களை ஏமாற்றி சென்றுவிட்டார்.
பெண்கள் வேதனை
விஜய் வருவார் என்று 4 மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறோம். அண்ணன் வந்துவிடுவார் என்கிற ஆசையில் தான் நான்கு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று விஜய் வரமாட்டார், அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். வருவார் என்கிற நம்பிக்கையில் 2 குழந்தைகளை விட்டு வந்து நிற்கிறோம். இவ்வளவு மக்கள் வந்த பிறகு கடைசியில் வரவில்லை என்றால் எப்படி.
காவல்துறையினரும் பாவம் தான். அவர்களும் நீண்ட நேரமாக நிற்கிறார்கள். நாங்கள் அவர்களை மட்டும் குறை சொல்லவில்லை. எவ்வளவு ஆதங்கப்படுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை பேட்டிக்காக மட்டும் சொல்லவில்லை. இவ்வளவு மணி நேரம் நின்றால் தான் எங்கள் வேதனை தெரியும். இவ்வளவு பேர் நசுக்கி வேதனையுடன் அவரை பார்க்க நிற்கிறோம். எதற்காக இப்போது ரத்து செய்தனர்.
ஏமாற்றம்
இவ்வளவு வண்டிகள் வந்து செல்கின்றன. அண்ணனின் வண்டி வந்து செல்ல எவ்வளவு நேரம் ஆகப் போகிறது. நிர்வாகிகளாவது அவரிடம் எடுத்து சொல்லி வர வைக்க வேண்டுமல்லவா. காவல்துறை இல்லாவிடின் என்ன.. விஜய் டீம், தவெக நிர்வாகிகள் பாதுகாப்பு கொடுத்திருக்கலாம் இல்லையா" என்றனர். விஜய்யை பார்க்க முடியாத ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.












Click it and Unblock the Notifications