ஸ்டாலினை விட மிகவும் ஆபத்தானவர் உதயநிதி.. வித்தியாசமாக வாழ்த்திய கரு. பழனியப்பன்
சென்னை: உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் கரு. பழனியப்பன், ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர் என குறிப்பிட்டுள்ளார். கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே என்றும் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் விளையாட்டுத்துறை சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.
அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. கடந்த 19 மாதங்களாக அவ்வப்போது உதயநிதி அமைச்சராகப் போகிறார் என்ற தகவல் மட்டும் வந்துக் கொண்டே இருந்தது.
இதை அமைச்சர்களும் உறுதி செய்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்ற உதயநிதி, மேடையிலேயே அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். விமர்சனங்களை செயல்களால் எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் கரு. பழனியப்பன், ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில், "கருணாநிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின், என்று கதறியவாளுக்குத் தெரியும், ஸ்டாலினை விட ஆபத்தானவர் உதயநிதி என்று. கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே" என பதிவிட்டுள்ளார்.
திமுகவை எப்போதும் கடுமையாக விமர்சிக்கும் பாஜகவின் எச்.ராஜா, தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும், 100 நாட்களுக்கு இந்த அரசை விமர்சிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். சில மாதங்கள் கழித்து அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளையொட்டி எச்.ராஜா, டுவிட்டர் ஸ்பேஸில் அக்கட்சியினருடன் உரையாடினார். அப்போது அவர் பேசிய தகவல்கள் இணையத்தில் கசிந்தது. அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார். ஆண்டுக்கு 100க்கும் அதிகமான கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதை நினைவுபடுத்தியே கரு பழனியப்பன் இன்றைய தினம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதியை வாழ்த்தியுள்ளார். கருணாநிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின், என்று கதறியவாளுக்குத் தெரியும், ஸ்டாலினை விட ஆபத்தானவர் உதயநிதி என்று. கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications