விடைபெற்றது ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர்.. இடிக்கப்படும் 50 வருட சென்னையின் கம்பீரம்.. நீங்கா நினைவு
சென்னை: சென்னையில் 1970களின் இறுதியில் தொடங்கி 2020 வரை கம்பீரமாக இயங்கி வந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் விடைபெற்றது. பல வருடங்களாக இயங்கி வந்த தியேட்டர் கொரோனா காலத்துடன் முடிந்தது. அங்கு தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதால், இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் என்பது ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட சினிமா ரசிகர்களின் நீங்கா நினைவுகளுடன் விடைபெற்றுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
இன்றைக்கு யார் வேண்டுமானாலும் சினிமா எடுக்க முடிகிறது. சென்னை என்றால் இப்போது ஐடி வேலைகள், மால்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வாகனங்கள் தயாரிப்பு, போன்கள் தயாரிப்பு, துறைமுகம் என்று அடையாளமாக இருக்கிறது. ஆனால் சென்னை என்பது 70வது களிலும், 80களிலும், 90களிலும் சினிமா தான் அடையாளமாக இருந்தது. சென்னைக்கு ஓடிவரும் பலர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தான் வந்திருப்பார்கள். சினிமா ஆசையுடன் வரும் பலர் நேராக போய் இறங்கும் இடம் வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ தான்.

ஏவிஎம் ஸ்டுடியோ
ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் விஜய்சேதுபதி முதல் சூரி வரை எத்தனையோ நடிகர்கள் வாய்ப்பு தேடி வாசலில் கனவுகளுடன் நின்ற இடம் ஆகும். சினிமாவில் ஒருவர் நுழைகிறார் என்றால், ஏவிஎம் ஸ்டுடியோவை தான் அன்றைக்கு காட்டுவார்கள். வடபழனிக்கு மட்டுமல்ல மொத்த சென்னைக்குமே ஏவிஎம் ஸ்டுடியோ அடையாளமாக இருந்து வருகிறது. ஆனால் முன்பு போல் இல்லை.. பாதி இடங்களை விற்றுவிட்டது. பல திரைப்படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் படிப்படியாக திரைப்பட தயாரிப்பையே நிறுத்திவிட்டது. இப்போது அருக்காட்சியகம் ஒன்றையும், சிறிய அளவில் ஸ்டுடியோ மற்றும் செட்டுகளையும் வைத்திருக்கிறது. முன்பு போல் இல்லை..கொரோனாவிற்கு முன்பே ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரையும் மூடிவிட்டது.
1979ல் கட்டிய தியேட்டர்
ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் 70களில் சென்னையில் இரண்டு தியேட்டர் வாங்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அப்போது அவருக்கு அமையவில்லை. இதனால் சொந்தமாக தியேட்டர் கட்ட விரும்பினார். அதன்படி தியேட்டர் கட்டப்பட்டது. ஆனால் தியேட்டர், அவர் மறைந்த பின்னரே திறக்கப்பட்டது. 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் திறக்கப்பட்டது. இந்த தியேட்டரில் ஆரம்பத்தில் டிக்கெட் கட்டணம் 2.50 காசாக இருந்தது.
கொரோனா முன்பு வரை ஓடியது
இந்த தியேட்டரில் ரஜினி கமல் படங்கள் மாறி மாறி வெளியாகியது. ரஜினி, கமல் ரசிகர்கள் பலருக்கும் ஏவிஎம் தியேட்டர் பிடிக்கும். இருவரின் படங்களும் வசூல் மழை பொழிந்து வந்தன. ஏவிஎம் தியேட்டரில் டைட்டானிக் பல நாட்கள் ஓடியது பெரிய சாதனையாக இன்றும் பார்க்கப்படுகிறது. நன்றாக இயங்கி வந்த ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் கொரோனா தொற்றுக்கு முன்பு வரை செயல்பட்டது. அப்போது கூட இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டது.
அடுக்குமாடி வருகிறது
கொரோனா சமயத்தில் பல தியேட்டர்கள் மூடப்பட்டன. அந்த வரிசையில் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரும் இணைந்தது. திரையரங்க தொழில் லாபகரமாக இல்லாததாலும், பராமரிப்புச் செலவுகள் அதிகரித்ததாலும் தியேட்டரை மூடிய ஏவிஎம் குடும்பத்தினர், அந்த இடத்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டங்களுக்கு விற்றனர்.
வரிசையாக மூடப்பட்ட தியேட்டர்கள்
எனவே, அந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. அதற்காக தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. சென்னையில் உதயம், திரையரங்கம், தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கம், பெரம்பூரில் இருந்த ஸ்ரீபிருந்தா திரையரங்கம் ஆகியவை மூடப்பட்ட நிலையில், அதேபோல் தான் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரும் விடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications