"அதான் சொல்லிட்டேனே".. பாஜக பற்றி கேட்டதுமே.. படக்குன்னு சொன்ன மதிமுக வைகோ.. உற்று கவனித்த கமலாலயம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக அரசுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்
சென்னை: சனாதன சக்திகளை ஊக்குவித்து இந்துத்துவா தத்துவத்தை நிலை நாட்டலாம் என்று கருதி தந்தை பெரியாரின் மண்ணில் திராவிட இயக்க பூமியில், பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. என்னுடைய ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி முக ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்கமாட்டார் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை வெளிப்படுத்தி உள்ளார்...!!
விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கட்சியானது, தன்னுடைய கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளது..
எனினும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது..

ப்ளான் பாஜக
மற்றொருபுறம், தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், திமுகவை எதிர்த்து களம் காண அதிமுக மட்டுமே பெரிய கட்சி என்ற கருத்து பாஜகக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியும் களம் காண முயன்று வருகிறது.. அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தங்களது பலத்தை அறிய முடியும் என்று பாஜக கருதுவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.. ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்த உடனேயே 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்திருந்த நிலையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார் என்று ஓபிஎஸ்ஸும் கூறியிருந்தார்.

எடப்பாடி செக்
ஆனால், பாஜக தனித்து களமிறங்கினால், எடப்பாடி பழனிசாமி ஆதரவு தருவாரா? என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எகிறி வருகிறது... இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன் என்று வைகோ கூறியுள்ளார்.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதுரை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

சபாஷ் திமுக
திமுக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.. இதன்மூலம் மக்களின் செல்வாக்கை பெற்று வருகிறது. இப்போது நடக்க போகும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவினுடைய ஆதரவை பெற்ற காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகம் வேண்டாம்.. சனாதன சக்திகளை ஊக்குவித்து இந்துத்துவா தத்துவத்தை நிலை நாட்டலாம் என்று கருதி தந்தை பெரியாரின் மண்ணில் திராவிட இயக்க பூமியில், பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, ஒவ்வொரு ஊரிலும், அவர்கள் தங்கள் கொடியேற்ற செய்யலாம்.. பணம் கொடுத்து ஒரு கிளையை அமைக்க பார்க்கலாம். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.

வீடு தேடி மருத்துவம்
திராவிட மாடல் நடத்திவரும், என்னுடைய ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி முக ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகம் பண்படுத்தப்பட்டிருக்கிறது... இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது.. ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி, "வீடு தேடி மக்களுக்கு மருத்துவம்" போன்ற இதுவரை இல்லாத பல மாநிலங்களில் முயற்சிக்காத திட்டங்களைகூட, இந்த அரசு நிறைவேற்றி கொண்டிருக்கிறது.. அதனால், இந்த அரசு மக்கள் செல்வாக்கை நாளுக்கு நாள் அதிகம் பெற்று வருகிறது..

ஓய்ந்து போயாச்சு
தமிழ்நாடு ஆளுநர் பதவி என்பது, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. குப்தா அவர்கள் மசோதா கொண்டுவந்தபோது, நாடாளுமன்றத்தில், ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்றுசொன்னேன்.. அதேபோல, ஆச்சாரியா அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது, அரசியலில் ஓய்ந்து போய், தோற்றுப் போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த ஆளுநர் மாளிகைகள் உருவாக்கப்பட்டன. இதை ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.. ஆனால், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிற ஆளுநர், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பாக நாளும் பேசி வருகிறார்...

ஆல்ரெடி ஆரூடம்
தமிழ்நாட்டை "தமிழகம்" என்று சொல்லிவிட்டு இப்பொழுது எப்படியாவது அதை மறைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான விளக்கங்களை பேசிக்கொண்டிருக்கிறார் . அதிலிருந்து அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது நன்றாக விளங்குகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், பாஜக ஆதரவு நிலைப்பாடு குறித்து கேட்கிறீர்கள்.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன்" என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications