விபூதியுடன் திருவள்ளுவர்.. அப்படியே திருப்பரங்குன்றம் தீபத்தையும் ஏத்திட்டா.. தவெகவைப் பாராட்டிய வானதி
சென்னை: சென்னை அருகே சின்ன நீலாங்கரையில் தவெக கட்சி சார்பில் திறக்கப்பட்ட மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில், திருவள்ளுவருக்கு ருத்ராட்சம் மற்றும் நெற்றியில் திருநீறு அணிவித்து ஓவியம் வரையப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது. இந்நிலையில், தவெகவினரின் இந்தச் செயலுக்கு பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தெய்வ புலவர் என்று அழைக்கப்படும் திருவள்ளுவரை சுற்றி கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் சர்ச்சை எழுந்து வருகிறது. பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவு அமைப்புகள் திருவள்ளுவரை இந்து மதத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்துவதோடு நெற்றியில் பட்டை, ருத்ராட்சம் மற்றும் காவி உடையுடன் காட்சிப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் திராவிட இயக்க பற்றாளர்கள் திருவள்ளுவர் எம்மனத்தையும் சார்ந்தவர் அல்லர். அவரை குறிப்பிட்ட ஒரு மத அடையாளத்தோடு காட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் அனைத்து புகைப்படங்களிலும் திருவள்ளுவர் மதச்சார்பற்றவராகவே காட்டப்படுகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் சென்னை சின்ன நீலாங்கரைப் பகுதியில் திருவள்ளுவரின் புகைப்படம் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.
அங்கு மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட வலை உலர்த்தும் கூடத்தை தமிழக அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். கூடத்தின் மேற்பகுதியில் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டிருந்தது. நெற்றியில் விபூதியுடன் ருத்ராட்சம் அணிந்து திருவள்ளுவர் காட்சிப்படுத்தப்பட்டிருந்தார். இதற்கு திராவிட இயக்க பற்றாளர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கான அரசு பாஜகவின் ஊதுகுழல் போலவே செயல்படுவதாகவும் திருவள்ளுவரை ஒரு மத அடையாளத்துக்குள் சுறுக்குவதாகவும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் பாஜக தேசிய மகளிர் அணி முன்னாள் செயலாளரான வானதி சீனிவாசன்.
இது தொடர்பாக தனது பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.
கடந்த கால திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி.
மேலும் தொடர்ந்து இந்து மத வழிபாட்டுத் தலங்களான தாய் மூகாம்பிகை கோவில், கனகதுர்க்கை கோயில் என சென்று வழிபட்டு வரும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்."என கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
