தமிழ் புத்தாண்டு நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரும் தேநீர் விருந்து...விசிக, கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, சிபிஐ, சிபிஎம்,விசிக கட்சிகள் அறிவித்துள்ளன.
சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை முதல்நாளில் பிறக்கும் தமிழ் புத்தாண்டு செழிப்பின் தொடக்கத்தை குறிக்கிறது. பகவான் மகாவீரின் அகிம்சை, கண்ணியம், சமத்துவம் அனைவருக்கும் அன்பின் மதிப்பை கற்பிக்கின்றன என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிகளைத் தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தமிழக ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கையையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாகச் செயல்பட ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக மக்களின் உணர்வுகள்
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா உள்ளிட்டவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழகச் சட்டமன்றத்தைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணை வேந்தர் நியமன பிரச்னை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளினால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை" என்று முடிவு செய்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசிக தொல். திருமாவளவன்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அறிவித்துள்ளது. நீட் உள்ளிட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளதை கண்டித்து ஆளுநரின் தேநீர் விருந்தை விசிக புறக்கணித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனும் ஆளுநர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆளுநருக்கு நன்றி
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு நன்றி. எனினும், அந்நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவு
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ள நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் புறக்கணித்துள்ளது. அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது. தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறுத்திவைத்து, தமிழக மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications