கரூரே கண்ணீரில் மிதக்க.. விஜய் செய்த மிகப்பெரிய தவறு! இதுவா தலைவனுக்கு அழகு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரம். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கைகளை தொடங்கியிருக்கும் நிலையில், விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் வழக்கம் போல் வெறும் ட்விட்டர் அரசியலோடு நின்றுவிட்ட விஜய் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசாதது மிகப்பெரிய தவறு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். வாரத்தின் சனிக்கிழமை மட்டும் ஒரு நாளைக்கு மூன்று மாவட்டங்கள் என விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

முதல் நாள் திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் மிகத் தாமதமாகவே பிரச்சாரம் தொடங்கியது. காலை 10 மணிக்கு திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதியம் 2 மணிக்குத்தான் திருச்சி வந்தார்.

Vijay tvk Karur

விஜய் கரூர் நெரிசல்

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அன்றிலிருந்து அடுத்தடுத்து விஜய்யின் சுற்றுப்பயணங்கள் முற்றிலும் சொதப்பின. திருச்சியில் கூட முதல் நாள் பிரச்சாரத்தில் மைக் வேலை செய்யவில்லை. இப்படி அடிப்படை விஷயங்களில் தவெக நிர்வாகிகள் கவனம் செலுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது. நாகை திருவாரூர் பிரச்சாரத்திலும் இதேதான் நிலைமை. இந்த நிலையில் அடுத்த மாதம் கரூரில் விஜய் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த 27ஆம் தேதி பிரச்சாரத் திட்டம் மாற்றப்பட்டது. திமுக முப்பெரும் விழாவை நடத்திய நிலையில் அதற்குப் பதிலடியாக விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

41 பேர் உயிரிழப்பு

ஆனால் அன்றுதான் அந்தத் துயர சம்பவம் நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் 8:00 மணிக்குத்தான் சென்னையில் இருந்தே புறப்பட்டார். தொடர்ந்து திருச்சியில் இருந்து கரூர் வரவும், கரூர் பைபாஸிலிருந்து பிரச்சாரம் நடைபெற்ற வேலுச்சாமி புரத்திற்கு வருவதற்கும் இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் 11 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டதால் அங்கு காலையிலிருந்து உணவு, குடிநீரின்றி ஆயிரக்கணக்கானோர் அங்கு காத்திருந்தனர். எவ்வளவோ அறிவுறுத்தியும் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.

கூட்ட நெரிசல் மரணம்

இந்த நிலையில் விஜய் பிரச்சாரம் முடித்துவிட்டுச் சென்ற போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதில் 10 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் வந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். துணை முதலமைச்சர் உதயநிதி, அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கரூர் விரைந்தனர். ஆனால் விஜய் தற்போது வரை கரூர் செல்லவில்லை.

விஜய் மவுனம்

இதுதான் மிகப்பெரிய தவறு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆரம்பத்திலிருந்து தனது பிரச்சாரத்திற்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள் என்பதைக் கவனித்து விஜய், கூட்டத்திற்கு முன்னதாகவே வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே பலர் மயங்கி விழுந்த நிலையில் அதனையும் பொருட்படுத்தாமல் பேசிவிட்டுச் சென்றுவிட்டார். மேலும் விஜய் பிரச்சாரத்தில் ஆரம்ப கட்டத்தில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் 10:00 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றுவிட்டார்.

ட்விட்டர் இரங்கல்

இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் விஜய் தனது கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களையும் சந்திக்காமல் புறக்கணித்துச் சென்றார். சென்னை சென்றதும் நடந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் மட்டுமே இரங்கல் தெரிவித்தார். அடுத்த நாள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அதோடு விஜய்யின் பதிவுகள் நின்றுபோனது.

தாமதமான விஜய்

முதலமைச்சர் தொடங்கி சாதாரண கட்சித் தொண்டர்கள் வரை கூட சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் கவனம் செலுத்திய நிலையில் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்த விஜய் இதனைக் கண்டுகொள்ளாதது மிகப்பெரிய கேள்வியையும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை கரூர் பகுதிக்கு விஜய் செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வழக்கமான கட்சி நிகழ்ச்சி தொடர்பாக வீடியோ வெளியிடும் விஜய் இந்த முறை நேரில் சென்றால் பிரச்சினையாகும் என்று உணர்ந்திருந்தாலும் குறைந்தபட்சம் இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோவாவது வெளியிட்டு இருக்கலாம்.

கடும் விமர்சனம்

அதுவும் செய்யவில்லை. அல்லது தவெகவின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகளாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து இரங்கல் தெரிவித்து இருக்கலாம். அதுவும் நடக்கவில்லை. இப்படியாக திருச்சியில் முதல் வாரப் பிரச்சாரத்தில் இருந்து தற்போது வரை விஜய்யின் அரசியல் நிகழ்வுகள் பெரும் குழப்பமாகவும் கண்டிக்கத்தக்க வகையிலுமே இருக்கின்றன. இது விஜய்யின் கவனத்திற்கு செல்லவில்லை எனச் சொல்லப்பட்டாலும் அதனைக் கூட சரி செய்யாதது விஜய்யின் மிகப்பெரும் தவறு. இதே நிலை தொடர்ந்தால் விஜய் மேலும் பல விமர்சனங்களுக்கு ஆட்பட வேண்டியதுதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+