இந்த பக்கம் திமுக.. அந்த பக்கம் அதிமுக! முதல்வராகி 100 நாட்கள்! சிஎம் விஜய் ஆட்சி சாதனையா? வேதனையா?
சென்னை: நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று நாளையுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. ஆட்சி அமைப்பதில் தொடங்கி தற்போது வரை விஜய்க்கு மிகப்பெரிய நெருக்கடிகளும், சிக்கல்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதையெல்லாம் தவிர்த்து விஜயின் 100 நாட்கள் ஆட்சி சாதனையா? வேதனையா? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. விஜயின் 100 நாட்கள் ஆட்சியில் என்ன நடந்தது? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை அதிமுக திமுக என்ற நிலை தான் இருந்தது. காங்கிரசை வீட்டுக்கு அனுப்பிய திமுக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் முதல்வரான நிலையில் கோபித்துக் கொண்டு எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார்.

அப்போதுதான் வரலாறு மாற்றி எழுதப்பட்டது. அன்றிலிருந்து 2024 அக்டோபர் வரை அதிமுக - திமுக தான் என்ற நிலை இருந்தது. அந்த 2024 அக்டோபரில் தான் உதயமானது தமிழக வெற்றி கழகம். பிப்ரவரி மாதமே கட்சியை ஆரம்பித்தாலும் அக்டோபரில் அதிகாரப்பூர்வ மாநாடு மூலமாக அரசியலுக்கு வந்தார் விஜய்.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அதிமுக திமுக தான் என்ற நிலை நீடித்து வந்தபோது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக வெற்றி கழகம். விஜய் முன்னரே சொன்னது போல தமிழக அரசியலையே வரலாற்றை புரட்டிப் போட்டது. வெறும் 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையே தமிழக முதல்வராக 'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என கூறி பொறுப்பேற்ற விஜய் நாளையுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறார்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இருக்கிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல், அமைச்சரவை பங்கீடு, போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள், ரீல்ஸ் சர்ச்சை என அடித்தடுத்து விஜய்க்கு பல நெருக்கடிகள் இருந்தாலும் 100 நாட்களில் என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறாரா? ஆட்சி மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் என்னென்ன? என பல கேள்விகள் இந்த ஆட்சியை நோக்கி வைக்கப்படுகிறது.
மே 10ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்றார் ஜோசப் விஜய். பதவி ஏற்ற போது மேடையிலேயே அவர் பேசிய பேச்சு கவனிக்க வைத்தது. லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி, பணம் சம்பாதிக்கும் திட்டமிருந்தால் வெளியே சென்று விடுங்கள் என விஜய் எச்சரிக்கை விடுத்தது கவனிக்க வைத்தது. மேலும் மேடையிலேயே 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,போதை பொருள் தடுப்புக்கு சிறப்பு படை என மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதற்குப் பிறகு மிக முக்கிய அறிவிப்பு என்றால் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தளங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியது. அதோடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டு 60 சதவீதம் ஆக்கப்பட்டது, அரசு ஊழியர்களை குஷிப்படுத்தியது. அடுத்த சில வாரங்களில் அம்மா உணவகத்தை விஜய் அரசு கையில் எடுத்தது பொதுமக்களிடையே பெறும் வரவேற்ப்பட்டது தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை மறுசீரமைத்து தரமான உணவை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே சிறு குறு விவசாயிகள் பெற்றிருந்த பயிர் கடன் தள்ளுபடி முக்கிய அறிவிப்பாக பார்க்கப்பட்டது. இதற்கிடையே டெல்லி அரசியலிலும் விஜய் ஒரு கண்ணை வைத்திருந்தார். மே மாதம் 27ஆம் தேதி டெல்லி சென்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மேகதாது அணை விவகாரம், தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து மனு அளித்தார். அதற்குப் பிறகு ஜூன் 9ஆம் தேதி சிங்கப்பின் அதிரடிப்படை திட்டமும் அதற்குப் பிறகு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியானது.
தற்போது தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்து இந்த திட்டங்களை அறிவித்திருந்தார் விஜய். திருமணம் நடைபெறும் பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் பட்டுப்புடவை, குடிசை வீடுகளுக்கு மாற்றாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கக்கூடிய நவீன சைக்கிள், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் என பல திட்டங்கள் இடம் பெற்றது.
இது மட்டும் அல்லாமல் தொழில் முதலீடுகளிலும் விஜய் அரசு கவனம் செலுத்தியதை குறிப்பிட வேண்டும். பல்வேறு சிக்கல்களுக்கு இடையே தொழில்துறை சார்பில் முதலீடுகளை ஈர்ப்பதில் விஜய் அரசு கவனம் செலுத்தியதாக கூறுகின்றனர் தொழில் துறையினர். 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், இதன் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசு சொல்கிறது.
சமீபத்தில், நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு' முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலீடுகள் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே குவியாமல் 23 மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளதாகவும் அரசு கூறுகிறது.
சரி ஆட்சி 100 நாட்களை வெற்றிகரமாக எட்டி இருப்பதை சாதனையாக பார்க்க முடியுமா? இந்த ஆட்சியில் வேதனைகளும் இருக்கிறது தானே என பொதுவெளியில்கேசப்படுவதையும் தவிர்த்து விட முடியாது. லஞ்சம் ஊழல் இல்லா நிர்வாகம் என சொன்னாலும், ஆங்காங்கே அடிக்கடி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்கி கைதாவதைப் பார்க்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கிறது.
மின்தடை விவகாரம் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. ஒருபுறம் நிர்வாக பிரச்சனைகள் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்தவில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. எல்லாவற்றையும் விட விஜய்க்கு மிகப்பெரிய தலைவலி அமைச்சர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது தான். போதைப்பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சைகள் சிக்கிய சரத்குமார், கீர்த்தனா ராஜேஸ்வரி இடையேயான மோதல், ஒருமையில் பேசி சிக்கிக் கொள்ளும் அமைச்சர்கள், ஆய்வு என்ற பெயரில் அட்ராசிட்டி செய்யும் தவெக நிர்வாகிகள் என விஜய்க்கு பல நெருக்கடிகள் இருக்கிறது.
100 நாட்களில் எல்லாவற்றையும் சமாளித்து விட முடியாது என்றாலும் இவற்றில் சில பிரச்சனைகளை குறி வைத்து பேசி தான் ஆட்சிக்கு வந்தார் விஜய். எனவே அவற்றின் மீது கவனம் செலுத்துவது அவசியம். எல்லாவற்றையும் விட விஜய்க்கு மிகப்பெரிய சவால் என்றால் அது சட்டப்பேரவை தான். கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் திமுக ஆளும் கட்சியாக இருந்தால் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும். அதிமுக ஆளும் கட்சியாக இருந்தால் திமுக வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும்.
ஆனால் தவெக ஆட்சியில் இருக்கும் நிலையில் எதிர்புறம் இருபெரும் ஜாம்பவான்களும் எதிர்க்கட்சிகளாக அமர்ந்திருக்கின்றனர். இந்த இரு கட்சிகளும் 'பழம் தின்று கொட்டை போட்டவை'. அதனால்தான் அதிமுக திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க முடியாமல் திணறுவதையும், சில நேரங்களில் தங்களை மீறி வார்த்தைகள் விடுவதையும் பார்க்க முடிகிறது. ஆட்சிக்கு எதிராக எழும் ஒவ்வொரு விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியது முதல்வர் விஜய்யின் பொறுப்பு. மேலும் அவர் உடனிருக்கும் சகாக்களும் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் ஒரு சில அமைச்சர்களின் பேச்சும் உடல் மொழியும் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இது நிச்சயம் ஆட்சிக்கு எதிராக தான் போய் முடியும் என்பதை மறந்து விடக்கூடாது. 100 நாட்களில் எந்த ஆட்சியையும் எடை போட்டு விட முடியாது. அதே நேரத்தில் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல இந்த ஆட்சி சாதனையும்.. வேதனையும்.. நிறைந்ததாகவே இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications
