உள்ளாட்சி தேர்தல் வெற்றி..! பட்டியல் வெளியிட்டு மக்களுக்கு நன்றி சொன்ன விஜய் மக்கள் இயக்கம்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு தளபதி அவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனைத் தீர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், எந்த மாவட்டத்தில் எந்த பதவிக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பதை பட்டியல் வெளியிட்டு நன்றி கூறியுள்ளது தளபதி விஜய் மக்கள் இயக்கம்.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் கூறியுள்ளதாக புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 169 பேர் போட்டியிட்டனர். அதில் 129 பேர் வெற்றிப் பெற்றதாக செய்திகள் வெளியானது.

129 பேர் வெற்றி
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களும் வெற்றி பெற்றிருந்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 129 இடங்களில் வெற்றிபெற்றனர்.

வாழ்த்து
வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடிகர் விஜய்யை சந்திப்பதற்காக பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்கு திங்கட்கிழமையன்று வருகை தந்தனர். அவர்கள் அனைவரையும் சந்தித்த விஜய், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தவறு செய்தால் நடவடிக்கை
அதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் கூறியதாக தெரிவித்தார்.

விஜய் மக்கள் இயக்கம் நன்றி
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு தளபதி அவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்களுக்கு சேவை
வெற்றிவாகை சூடிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தளபதி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனைத் தீர்க்கும் நல்வாழ்வு பணியினை தளபதி அவர்களின் உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி மக்களின் பணியை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

யார் யார் எந்த தொகுதியில் வெற்றி
இந்தத் தேர்தலில் இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள், 12 ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உள்ளிட்ட 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், எந்த மாவட்டத்தில் எந்த பதவிக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பதை பட்டியல் வெளியிட்டு நன்றி கூறியுள்ளது தளபதி விஜய் மக்கள் இயக்கம். குழு புகைப்படத்தில் வெற்றி பெற்றவர்களுடன் ஒரு ஓரத்தில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் நடிகர் விஜய். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications