Vijay: ஜனநாயகன் லுக்கில் இருக்கும் விஜய்.. இன்னுமா ஷூட்டிங் முடியலை.. கள அரசியலுக்கு வருவது எப்போது?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடந்து வரும் கல்வி நிகழ்ச்சியில் நடிகரும், கட்சியின் தலைவருமான விஜய், இன்னும் ஜனநாயகன் படத்தின் லுக்கிலேயே இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதன் மூலமாக ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை என்று தெரிய வந்துள்ளதால், விஜய் எப்போது களத்திற்கு வருவார் என்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், GOAT படத்திற்கு பின் மேலும் ஒப்புக் கொண்ட ஒரு படத்தில் நடித்துவிட்டு முழு நேர அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்திருந்தார். கடைசி படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அத்தியாயம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய அ.வினோத் இயக்கி வருகிறார்.

ஜனநாயகன் படம்
இந்த படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இந்த படத்தின் பூஜை போடப்பட்டு, உடனடியாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி டியோல் வில்லனாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று ஆரம்பரத்தில் சொல்லப்பட்டது.
மாதம் 1 நிகழ்ச்சி
அதன்பின் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக விஜய் களத்திற்கு வருவதற்கு சரியாக இருக்கும் என்றும் அக்கட்சி தொண்டர்கள் கணித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே ஒவ்வொரு மாதமும் ஒரு நிகழ்ச்சி என்று விஜய் பங்கேற்று வந்தார். பிப்ரவரியில் 2ஆம் ஆண்டு தொடக்க விழா, மார்ச் மாதம் பொதுக்குழு கூட்டம், ஏப்ரல் மாதம் கோவை பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
அறிக்கை அரசியல்
தற்போது மே மாதத்தில் கல்வி விழாவில் கலந்து கொண்டுள்ளார். இப்படி மாதத்திற்கு 2 நாட்கள் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மீத நாட்களில் அறிக்கைகள் மற்றும் ட்வீட்கள் மூலமாகவே விஜய் அரசியல் செயல்பாடுகள் இருந்து வந்தன. இதனை எதிர்க்கட்சிகள் எளிதாக விமர்சித்து வந்தன. இதனால் விஜய் எப்போது கள அரசியலில் ஈடுபடுவார் என்பதே கேள்வியாக இருந்தது.
ஜனநாயகன் லுக்
ஏனென்றால் விஜய் களத்திற்கு வந்தால் மட்டுமே அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க வேண்டும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் நடந்து வரும் கல்வி நிகழ்ச்சியில் விஜய் இன்னும் ஜனநாயகன் படத்தின் லுக்கிலேயே இருக்கிறார்.
தொண்டர்கள் கேள்வி
இதே லுக்கில் தான் கடந்த டிசம்பர் மாதம் முதலே இருக்கிறார். இதனால் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் தனது பிறந்தநாளுக்குள் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்து களத்திற்கு திரும்புவாரா என்பதே அக்கட்சியினர் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications