தவெகவின் 2வது மாநாடு.. தயாராகும் வேட்பாளர் பட்டியல்.. மதுரையில் விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு!
மதுரை: மதுரையில் நடக்கவுள்ள தவெகவின் 2வது மாநில மாநாட்டில் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே 120 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே 2வது மாநாட்டை எந்த இடத்தில் நடத்தலாம் என்று தவெக தலைமை ஆலோசித்து வந்தது. அதன்படி மதுரையில் நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால் இடத்தை முடிவு செய்வதற்காக இந்த விஷயம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

தவெகவின் 2வது மாநில மாநாடு
தவெகவின் மதுரை மாவட்டச் செயலாளர்களான தங்கப்பாண்டி மற்றும் கல்லணை ஆகியோரை வைத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடத்தை தேடி இருக்கிறார். இதன்படி மதுரை விமான நிலையத்தில் இருந்து சில கிமீ தூரத்தில் உள்ள எலியார்பத்தியில் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதன்பின் சைலண்டாக இன்று காலை தவெக நிர்வாகிகள் கலந்து கொண்ட பந்தக்கால் நடும் விழா நடத்தப்பட்டுள்ளது.
அமைதி காத்த தவெக
இந்த விழாவில் கூட மதுரையைச் சேர்ந்த நிர்வாகிகளைக் கடந்து வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்தார். விஜய் அறிவித்த பின்னர்தான், தவெக சார்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாநாடு நடத்த அனுமதி பெறுவதற்கான கடிதமே அளிக்கப்பட்டது.
தென் மாவட்டங்கள் குறி
இந்த மாநாட்டின் மூலமாகத் தேர்தல் பிரச்சாரத்தையும் விஜய் தொடங்க இருக்கிறார். அதேபோல் தென் மாவட்ட கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வகையில் விஜய் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தியுள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டை விடவும், ஒரு படி சிறப்பாக இருக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தி இருக்கிறார்.
விஜய் வெளியிடும் அறிவிப்பு
விஜய்-க்கும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெகவின் 2வது மாநில மாநாட்டில் சைலண்டாக மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை விஜய் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.
வேட்பாளர்கள் அறிமுகம்?
இதுகுறித்து விசாரித்த போது, தவெக சார்பாக 120 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்பது அக்கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிந்த ரகசியம் தான். தேர்தல் பணிகளை முடுக்கிவிடுவதற்காக தவெக தலைவர் விஜய் முன் கூட்டியே வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறினர்.












Click it and Unblock the Notifications