இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்யும் தவெக.. அதற்கு துணை நிற்கும் அதிமுக-பாஜக.. ஆர்.எஸ்.பாரதி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் விவகாரத்தில் இறந்தோரின் உறவினர்களிடம் ஏமாற்றி சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். மேலும், இறந்தோரை வைத்து தவெக அற்ப அரசியல் செய்வதாகவும் அதற்கு அதிமுக- பாஜக துணை நிற்பதாகவும் விமர்சித்துள்ளார். இதன் மூலம் நீதிமன்றத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றத் துடிப்பதாகவும் சாடியுள்ளார்.

கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை எனச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில், தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையே வழக்கு தொடர்ந்தவர்களிடம் தவெகவும் அதிமுகவும் ஏமாற்றி கையெழுத்து பெற்றுள்ளதாகவும் இறந்தோரை வைத்து தவெக அற்ப அரசியல் செய்வதாகவும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

Vijay s TVK is doing cheap politics on Karur Stampede and BJP-ADMK supports him attacks RS Bharathi

ஆர்.எஸ்.பாரதி

இது தொடர்பாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "கரூர் துயரச் சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதலமைச்சர். உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கொண்டு உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இப்படி அனைத்து விசாரணைகளும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதேசமயம் தற்போது வெளிவரும் உண்மைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் நீதிமன்றத்தையே ஏமாற்றும் வகையில் எதிர் தரப்பினர் செயல்பட்டுள்ளதையும் வெளிக்காட்டுகிறது.

நிவாரணத் தொகைக்காக

கரூர் துயரத்தில் தன் மகனைப் பறிகொடுத்த தந்தை பன்னீர்செல்வம் சார்பில் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது மனைவி தற்போது கூறும் உண்மைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. தன் மனைவி மற்றும் மகனைக் கைவிட்டு தனியாக வாழும் பன்னீர்செல்வம் தற்போது துயரத்திற்குக் காரணமான தவெக கட்சி அளிப்பதாகச் சொன்ன நிவாரணப் பணத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார் என்ற உண்மையை வெளிப்படுத்தி உள்ளார் அச்சிறுவனை இழந்த தாய்.

அதேபோல தன் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் மூலம் ஏமாற்றி போலியாகக் கையெழுத்து பெற்று அவர் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது பற்றி செல்வராஜ் வெளியிட்டுள்ள காணொலியில் தனக்குத் தன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதே தெரியாது என்கிறார்.

முறைகேடு

இப்படி கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் பலரை அரசியல் உள்நோக்கத்திற்காக முறைகேடாகப் பயன்படுத்துவதை அதிமுக மற்றும் தவெக செய்து வருவது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் திருபுவனம் அஜித்குமார் இறந்தது தொடர்பாக தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது உயர்நீதிமன்றம் அமைக்கும் SIT விசாரணை வேண்டும் அதற்காக வழக்கு தொடர இருந்த நிலையில் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விட்டது என்றும் ஏன் சிபிஐ பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள் எனவும் பேசினார் விஜய்.

பாஜக உதவியைப் பெற்ற தவெக

ஆனால் இன்று தவெக சம்மந்தப்பட்ட கரூர் வழக்கில் மறைமுகமாக இறந்தோர் குடும்பத்தில் உள்ளவர்களிடம் முறைகேடாக கையெழுத்து பெற்றும், பணத்தாசை காட்டியும் சிபிஐ விசாரணை வேண்டி வழக்கு தொடுத்துள்ளது தவெக. இதற்காக அதிமுக மற்றும் பாஜகவின் மறைமுக உதவியை தவெக பெற்றுள்ளது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. குற்றவாளிகள், தவறு செய்தவர்கள், ஊழல்வாதிகள் அனைவரையும் அரவணைத்து தூய்மையாக்கும் வாஷிங் மெஷினான பாஜக பின்னால் ஏன் ஒளிந்து கொண்டுள்ளீர்கள் விஜய்? என் அப்பா குதிருக்குள் இல்லை என்பது போல உங்கள் நடவடிக்கைகளே உங்களை மக்கள் முன் காட்டிக் கொடுத்துவிட்டது.

இதை எல்லாம் பார்க்கும் போது இறந்தவர்களை வைத்து தங்களின் அரசியல் ஆதாயங்களைத் தீர்த்துக்கொள்ள எதிர்க்கட்சியினரும், புதுக்கட்சியினரும் முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது நீதிமன்றத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றும் அற்ப செயல்.

கடும் விமர்சனம்

ஏய்த்துப்பிழைப்பதையே வாடிக்கையாகக் கொண்ட எடப்பாடி பழனிசாமி இவ்விவகாரத்திலும் மக்களை ஏய்க்க நினைக்கிறார். தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதையும் மறந்து அரசியல் சுய லாபத்திற்காக இப்படி மூன்றாம்தர அரசியலை கையில் எடுத்து இருப்பது வெட்கக்கேடு. இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+