சட்டென மேடையை விட்டு.. அவசர அவசரமாக நடந்த ஸ்டாலின்.. ரூ.6000 நிவாரணம் வழங்கிய நிகழ்ச்சியில் பரபரப்பு
சென்னை: இன்று வேளச்சேரியில் வெள்ள நிவாரண தொகை ரூ. 6000 ஐ மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய போது நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு - ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு உத்தரவு: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
"மிக்ஜாம்" புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9.12.2023 அன்று அறிவிப்பினை வெளியிட்டார்.
இன்றைய நிகழ்ச்சி: இந்த நிலையில்தான் இன்று வேளச்சேரியில் வெள்ள நிவாரண தொகை ரூ. 6000 ஐ மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய போது நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது . வரிசையாக பலரும் இன்று மேடை ஏறி நிதி உதவி பெற்றனர். அப்போது மேடை மீது ஏற முடியாமல் தவித்த மூதாட்டி கீழேயே நின்றபடி பார்த்துக்கொண்டு இருந்தார்.
அவர் வரிசையில் நின்றார் . அவருக்கு மேடை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவரால் வயோதிகம் காரணமாக மேடையில் எற முடியவில்லை. இதை ஸ்டாலின் அங்கிருந்தபடியே கவனித்தார். இதையடுத்து அருகே இருந்த அதிகாரிகளை, ஸ்டாலின் நகர சொன்னார். அதன்பின் சட்டென யோசிக்காமல்.. மேடையை விட்டு கீழே இறங்கி வந்து நிவாரணத்தொகை 6000 ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மூதாட்டிக்கு வழங்கினார்.
இந்த சம்பவம் அங்கே பெரிய அளவில் கவனம் பெற்றது. முதல்வர் ஸ்டாலின் சட்டென இப்படி செய்தது பெரிய அளவில் கவனம் பெற்றது.
நிவாரணம் வழங்கப்படும்: இந்த நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள், ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.6000/- நிவாரணத் தொகை இன்று முதல் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் 13 இலட்சத்து 72 ஆயிரத்து 509 குடும்ப அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 8 ஆயிரத்து 726 குடும்ப அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரத்து 952 குடும்ப அட்டைதாரர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 149 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறுவர். இதற்கென தமிழ்நாடு அரசால் 1486 கோடியே 93 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கு முன்னுரிமை: இந்நிவாரணத் தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடை அருகில் ரூ.6000/- நிவாரணத் தொகையினை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிவாரணத் தொகையை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications