அந்த மேட்டர் பத்தி பேச்சே இல்ல.. ‘ஓபிஎஸ் அவ்வளவு பாசம்’ எம்எல்ஏக்கள் கூட்டம் பற்றி ஜெயக்குமார் பரபர!
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடர் பற்றி இன்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை கூடவிருக்கும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, சட்டப்பேரவை இருக்கை விவகாரத்தில் இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், அதுபற்றி ஈபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிந்தபிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே காரில் ஏறி கிளம்பினார்.

என்ன ஆலோசனை?
அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த பொன்விழா நிறைவை எழுச்சியோடு கொண்டாடுவது பற்றி கருத்துகள் பகிரப்பட்டன." எனத் தெரிவித்தார்.

சபாநாயகர்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக பங்கேற்குமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "அந்த விவகாரம் பற்றி இன்று விவாதிக்கவில்லை. விவாதிக்காத விஷயத்தை எப்படி சொல்வது? அது சட்டமன்ற கட்சி முடிவு செய்ய வேண்டிய விஷயம். எங்கள் பக்கம் 63 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில், சட்டசபை விதிகளை பேரவைத் தலைவர் கடைபிடிக்க வேண்டும்.

அடுத்தகட்ட முடிவு
சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் பொறுத்தவரை சட்டமன்றக் கட்சிதான் முடிவை எடுக்கும். சபாநாயகரின் நடவடிக்கையைப் பொறுத்துத்தான் சட்டமன்றக் கட்சி அடுத்தகட்ட முடிவை எடுக்கும். இப்போதைக்கு அதுபற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை. நாளை தான் என்ன முடிவு என்பது தெரியவரும்." என்றார்.

ஓபிஎஸ் + திமுக - உலகறிந்த விஷயம்
ஓபிஎஸ் உடன் சமாதான பேச்சுவார்த்தை பற்றி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், "எதற்கு விவாதிக்க வேண்டும்? ஏற்கனவே ஓபிஎஸ் நீக்கம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அதேபோல, திமுகவுக்கு சார்பாக ஓபிஎஸ் நடந்துகொண்டதும் எல்லோருக்கும் தெரியும். ஓபிஎஸ்ஸும், திமுகவும் இணைந்த கரங்களாகச் செயல்படுவது உலகத்திற்கே தெரியும்.

என்ன செய்கிறார் ஓபிஎஸ்?
எடப்பாடி பழனிசாமி பேச்சிலும், ஓ.பன்னீர்செல்வம் பேச்சிலும், யார் திமுக அரசை விமர்சிக்கிறார்கள் என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டார்கள். நாங்கள் தான் திமுகவை எதிர்த்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். திமுக அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து வருகிறோம். ஆனால், ஓபிஎஸ், திமுகவை எதிர்த்து என்ன அரசியல் செய்கிறார்? இப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் அவரோடு கைகோர்க்க வேண்டும்?

அவ்வளவு பாசம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி என்றுதான் சொல்வார். அவருக்கு வழங்கப்படும் அடைமொழியைச் சொல்ல மாட்டார். இப்போது ஓ.பன்னீர்செல்வத்தை திமுக முன்னாள் தலைவரின் பெயரை சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். அவர் சொல்லவே மாட்டார். அவ்வளவு பாசம் அவருக்கு." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications