வேளச்சேரிக்கு அப்படி நடந்தால் வாழ்நாள் வரம்.. தென் சென்னைக்கு மிகப்பெரிய நல்லது.. அரசு கவனிக்குமா?
சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவதன் மூலம் வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்பை குறைக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்திருந்தது. உண்மையில் கிண்டி ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்தில் ஏரியை உருவாக்கினால், தென்சென்னைக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாகும். வேளச்சேரியில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை பெருமளவு தடுக்க முடியும் என்கிறார்கள்.
சென்னையில் வேளச்சேரி என்பதை தென் சென்னையின் தலைநகரம் என்று சொல்லலாம் . அந்த அளவிற்கு மிக முக்கியமான பகுதியாக மாறி உள்ளது. வெறும் 50 வருடங்களில் வேளச்சேரி எப்படி மாறி உள்ளது என்றால், மிகப்பெரிய ஏரிகள், நீர் நிலைகள் பெருமளவு அழிக்கப்பட்டு வளர்ந்துள்ளது. தென்சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு இதுதான் மிக முக்கிய காரணம் ஆகும்.

பள்ளிக்கரணை ஏரியும், வேளச்சேரி ஏரியும். கீழ்கட்டளை நன்மங்கலம் ஏரியும், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியும், பெருங்குடி ஏரியும், பெரும்பாக்கம் ஏரியும். பல்லாவரம் ஏரியும், 1960களில் அல்லது 1970களில் எப்படி இருந்தது.. இப்போது எப்படி உள்ளது என்பதற்கான வரைபடத்தை எடுத்து பார்த்தாலே எந்த அளவிற்கு சுருங்கி உள்ளதை என்பதை கண்கூடாக பார்க்க முடியும்.
வளர்ச்சிக்காக இழக்கக்கூடாதவற்றையும் எல்லாம் சென்னை இழந்துள்ளது. ஏனெனில் அரசால் சென்னையில் இழந்த ஏரிகளை திரும்பவும் அமைக்க எந்த காலத்திலும் முடியாது.. இப்படிப்பட்ட சூழலில் கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் ஏரியை உருவாக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான விவகாரத்தை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில் வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணை தலைவர் குமரதாசன் என்பவரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், 'வேளச்சேரி பகுதிகளில் புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியுமா? அல்லது ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்த முடியுமா?' என அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளச்சேரி ஏரிக்கு மேற்கு பகுதியில் ஆதம்பாக்கம் ஏரி மட்டுமே இருப்பதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்து. வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி, 'கிண்டி ரேஸ்கிளப் செயல்பட்டு வந்த இடத்தை பசுமை பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள நிலையில் நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரை சேமிக்க முடியும். வெள்ளம் ஏற்படுவதையும் தடுக்க முடியும். இதுகுறித்து தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும். புதிய நீர்நிலையை உருவாக்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும்' எனக்கூறி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம், வேளச்சேரி மக்களை காப்பாற்ற தமிழக அரசுக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் புதிய ஏரியை உருவாக்குவதன் மூலம் கிண்டி, ஆளுநர் மாளிகை, மீனம்பாக்கம், திரிசூலம், பழவந்தாங்கல், ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதிகளின் பெருமளவு மழைநீரை இங்கே சேமித்து வெள்ளம், வறட்சி வராமல் பாதுகாக்கலாம். இந்தப் பகுதிகளின் நீர் வீராங்கள் ஓடை வழியாக ஆதம்பாக்கம் ஏரி மற்றும் வேளச்சேரிக்கு வந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடையும். 100 ஏக்கரில் 20 அடி ஆழத்தில் புதிய ஏரியை உருவாக்கினால் 242 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். கிண்டி ரேஸ் கிளப்பில் ஏரியை உருவாக்குவதன் மூலம் வேளச்சேரிக்கு வரும் அதிகப்படியான மழை நீரை சேமித்து வெள்ளத்தில் இருந்து காப்பாற்றலாம்" என்று கூறியுள்ளது.
வேளச்சேரியை பொறுத்தவரை அரசு கூறியபடியே மேற்கே ஆதம்பாக்கம் ஏரி மட்டுமே உள்ளது. எனவே தற்போது கால்வாய்களை உருவாக்கி கிண்டி ரேஸ் கிளப் பகுதியை ஏரியுடன் கூடிய பூங்காவாக மாற்றி, அந்த ஏரி நிறைந்தால், அதனை அப்படியே கால்வாய் மூலமாக வேளச்சேரி ஏரிக்கு கடத்தி செல்ல முடியும். மேலும் அங்கிருந்து தண்ணீரை அப்படியே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு கொண்டு செல்ல முடியும். எனவே வெறும் பசுமை பூங்காவிற்கு பதில், ஏரியுடன் கூடிய பசுமை பூங்காவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications