சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தை உலுக்கும் ஆன்லைன் ரம்மி! கொலை, கொள்ளை, தற்கொலை! சீரழியும் குடும்பங்கள்.. கடிவாளம் எப்போது?

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் ரம்மி என்ற அரக்கனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை -கொள்ளை -தற்கொலை என குடும்பங்களை சீரழிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

குறுக்கு வழியில் பணம் சம்பாதித்துவிடலாம் என்ற அவநம்பிக்கையில் அகல கால் வைத்து அதல பாதாளத்தில் வீழ்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தரக்கூடிய ஒரு விவகாரமாகும்.

ஆன்லைன் ரம்மிக்கு கடிவாளம் போட என்ன வழி, சூதாட்ட மோசடியின் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் விளக்குகிறது இந்த தொகுப்பு.

60 பேர் தற்கொலை..ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் -ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைகோரி போராட்டம் அறிவித்த பாமக 60 பேர் தற்கொலை..ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் -ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைகோரி போராட்டம் அறிவித்த பாமக

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

ஒரு காலத்தில் பொழுதுபோக்குக்காக திருமண வீடுகள், துக்க விட்டுகள், உறவினர்கள் சந்திப்பின் போது விளையாடப்பட்ட சீட் ஆட்டம் இன்று சூதாட்டமாக உருமாறி நிற்கிறது. சீட் ஆட்டத்தில் பணத்தை பந்தயம் கட்டி விளையாடுவதால் சண்டை சச்சரவுகள் அதிகரித்ததோடு கிராமம், நகரம் என எந்த பாகுபாடும் இல்லாமல் மோதலில் உயிர்பலிகளும் பெருகின. இதன் காரணமாக பணம் கட்டி சூதாட்டம் நடைபெறுவது சூதாட்ட பொதுச்சட்டத்தின் கீழ் குற்ற நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு அது இந்தியாவில் நடைமுறையிலும் உள்ளது. இந்தியாவில் கோவா, சிக்கிம், டாமன் ஆகிய 3 மாநிலங்களை தவிர வேறு எங்கு பணம் பந்தயம் கட்டி சூதாட்டம் நடைபெற்றாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. குறிப்பாக தமிழக அரசின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் பணம் வைத்து சூதாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

இப்படி நேரடியாக பணம் வைத்து விளையாடும் சூதாட்டத்துக்கு இந்தியாவில் தடை இருக்கிறதே தவிர ஆன்லைன் சூதாட்டத்துக்கு எவ்வித தடையும் இல்லை என்பது தான் வேதனையான விவகாரமாகும். ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் நடைபெறும் சூதாட்டங்களில் பணத்தை பறிகொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. குறிப்பாக வாழ்வின் வசந்தத்தை அனுபவிக்க வேண்டிய இளம் தலைமுறையினர் தான் ஆன்லைன் ரம்மியால் விபரீத முடிவை நாடுகின்றனர். கடன் பட்டு தற்கொலை செய்பவர்கள் ஒரு ரகம் என்றால், ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கொள்ளை அடிக்க கூடியவர்கள் மற்றொரு ரகம். இதேபோல் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்துக்காக கொலை செய்யவும் துணிபவர்கள் மற்றொரு ரகம்.

விபரீத நிகழ்வுகள்

விபரீத நிகழ்வுகள்

இவைகளையெல்லாம் சமீப நாட்களாக நடைபெறும் நிகழ்வுகளின் மூலம் அறியலாம். நேற்று கூட சென்னையில் நகைகளை ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக அடகு வைத்த சென்னையை சேர்ந்த இளம்பெண் குளிக்கச் செல்வதாக கூறி தற்கொலை செய்துகொண்டார். இதேபோல் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கி செலவழித்த தனியார் வங்கி அதிகாரி ஒருவர், தானும் தற்கொலை செய்துகொண்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்த நிகழ்வு தமிழகத்தையே திடுக்கிட வைத்தது. இதேபோல் சென்னை திருவான்மியூர் மின்சார ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் பணியில் இருந்த டீக்காராம் என்பவர், தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் கட்டிப்போட்டுவிட்டு ரூ.1.25 லட்சத்தை திருடிவிட்டதாக நாடகமாடி ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக தாமே அந்தப் பணத்தை ஆட்டையை போட்ட நிகழ்வு நடந்தது.

தடைச்சட்டம்

தடைச்சட்டம்

இப்படி எங்கு பார்த்தாலும் நாளுக்கு நாள் ஆன்லைன் ரம்மி அரக்கனால் குடும்பங்கள் சீரழியும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஆன்லை ரம்மியை தடை செய்யக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று கூட அவர் விடுத்துள்ள பதிவில் கடந்த 10 மாதங்களில் மட்டும் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழந்து 23 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளார். இன்னும் கண்ணுக்கு தெரியாமல் ஊடக வெளிச்சம் படாமல் ஆன்லைன் ரம்மியால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்கள் எத்தனை பேரோ. இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டமாக ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

நீதிமன்றம் தள்ளுபடி

நீதிமன்றம் தள்ளுபடி

ஆனால் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு முறையான மற்றும் சரியான காரணங்கள் கூறப்படவில்லை எனக் கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதை காட்டிலும் அதை முறைப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்தச் சூழலில் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதனிடையே ஆன்லைன் ரம்மி எதன் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்படவில்லை, அதை தடை செய்ய என்ன வழிகள் என்பது குறித்து சைபர் கிரைம் வழக்குகளில் இண்டர்னேஷனல் அளவில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம்.

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

அப்போது அவர் கூறியதாவது; ''ஆன்லைன் ரம்மியை பொறுத்தவரை Game ஆ, Gambling ஆ என்று தான் பார்க்கப்படுகிறது. Game of skills, Game of chance என இரண்டு வகைகளில் பிரித்துப் பார்த்தால் ஆன்லைன் ரம்மி Game of skills பிரிவில் வருகிறது. இதனால் தான் இதனை சூதாட்டமாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. ஆன்லைன் ரம்மி இந்தியா மட்டுமில்லை உலகின் பல நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இப்போது உதாரணத்துக்கு சீனாவை எடுத்துக்கொள்வோம், அங்கேயும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு உள்ளது. ஆனால் இங்கு மாதிரி அங்கு 24 மணி நேரமும் விளையாட முடியாது, எவ்வளவு வேண்டுமானாலும் ஒருவர் பணத்தை வைத்து விளையாட முடியாது. சீனாவில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஆன்லைன் ரம்மி விளையாட முடியும்.''

 சீனாவில் கட்டுப்பாடு

சீனாவில் கட்டுப்பாடு

''அதேபோல் சீனாவில் மாதத்துக்கு 150 டாலருக்கு மேல் யாரும் பணம் கட்டி விளையாட முடியாது. வயது அடையாள அட்டையை முறையாக பதிவு செய்தால் மட்டுமே இதற்கு அனுமதியே கிடைக்கும். ஆனால் அதுபோன்ற நிபந்தனைகளோ, கட்டுப்பாடுகளோ இங்கு இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் தடைச் சட்டம் மீண்டும் இயற்றப்பட்டாலும் அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. காவல்துறையினர் ஒவ்வொருவருடைய செல்போனாக வாங்கி பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. கூகுள் பிளேஸ்டோரில் இருந்து ஆன்லைன் ரம்மி ஆப்பை நீக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு முழு தீர்வு கிடைக்கும். இதற்கு மத்திய அரசின் முடிவு மிக முக்கியம்.''

உளவியல் நிபுணர்

உளவியல் நிபுணர்

இதனிடையே ஆன்லைன் ரம்மி மீது மக்களுக்கு மோகம் வருவதற்கு என்ன காரணம் என்பது பற்றி சைபர் கிரைம் உளவியல் நிபுணர் விநோத் ஆறுமுகத்திடம் நாம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, ''முதலில் நமது மக்களுக்கு ஓய்வு நேரத்தை எப்படி கழிக்க வேண்டும் என்ற சரியான புரிதல் இல்லாததே இது போன்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ள முதல் காரணமாகும். இரண்டாவது பணத் தேவைகள் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அதிகரித்துள்ளன. கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை பார்த்துவிட்டு நாமும் பணம் சம்பாதித்துவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் ஆன்லைன் ரம்மி வலையில் விழுகிறார்கள். மீண்டும் அந்தக்காலம் போல் உறவுகளை மேம்படுத்துவது, நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவது, போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடத் தொடங்கினாலே ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு எல்லாம் நேரம் கிடைக்காமல் போய்விடும்.''

English summary
Online rummy demerits:ஆன்லைன் ரம்மி என்ற அரக்கனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை -கொள்ளை -தற்கொலை என குடும்பங்களை சீரழிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X