குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது?.. டி.என்.பி.எஸ்.சியின் முக்கிய அப்டேட்!
சென்னை: குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவு எப்போது வெளிவரும் என்று பலரும் காத்திருந்து வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவு இம்மாத இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல இளைஞர்களின் கனவாக அரசு வேலை இருந்து வருகிறது. இதற்காக எப்படியாவது அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என அல்லும் பகலும் இளைஞர்கள் படித்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு தேர்வுகள் குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற அறிவிப்புகளையும், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும் படித்து வருகின்றனர்.

குரூப் 2 தேர்வு
இதில் டிஎன்பிஎஸ்சியின் சார்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக அரசு அமைச்சகங்கள், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 5 ஆயிரத்து 413 இடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பிதனர். அதன்படி கடந்த கடந்த மே மாதம் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை தேர்வு நடந்தது. இதில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரம் பேர் கலந்துகொண்டு இந்த தேர்வை எழுதினர்.

தேர்வு முடிவு எப்போது
இந்த தேர்வுக்கான முதல் நிலை தேர்வு நடந்து முடிந்து சுமார் 4 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி ஆணையம் ஜூலை மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது. இதனால் தேர்வர்கள் பலரும் தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த மாத இறுதியில்..
இந்த நிலையில் சமீபத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான தேர்வு முடிவு இந்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால் எப்போது என்று அறிவிக்கவில்லை. இந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏன் இந்த தாமதம்
கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் உயர் நீதிமன்றத்தின் புதிய நடைமுறையை பின்பற்றி மதிப்பெண் பட்டியலை தயார் செய்வதனாலேயே இந்த கால தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 முடிவுகள் எப்போது?
டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடந்தது. 7 ஆயிரத்து 138 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான முடிவுகளையும் எதிர்பார்த்து தேர்வு எழுதியவர்கள் காத்திருந்து வருகின்றனர். சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான முடிவு டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தத நிலையில் தற்போது குரூப் 4 தேர்வு முடிவுகளும் இம்மாத இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications