அவசர அவசரமாக ஆக்ஷனில் இறங்கிய தலைவர்.. "அதுக்குள்ளயா".. அப்பாவு என்ன செய்வார்?
எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு சபாநாயகர் என்ன முடிவு எடுக்க போகிறார்
சென்னை: தமிழக சட்டமன்ற அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சபாநாயகருக்கு சட்டசபை செயலாளர் மூலமாக எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தன்னை அதிமுக பொதுக்குழுவில், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதாகவும், அந்த தகவலை இந்திய தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

லெட்டர் எழுதிய ஓபிஎஸ்
மேலும், தமிழக சட்டமன்ற அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கிறார் ஓபிஎஸ். அந்த பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி... ஆனால், கட்சியிலிருந்து தன்னை நீக்க எடப்பாடிக்கு அதிகாரமில்லை என்று மார் தட்டிவரும் ஓபிஎஸ், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்றும், அதனால், எதிர்க்கட்சித்துணை தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்க எடப்பாடி தந்திருக்கும் கடிதத்தை ஏற்கக்கூடாது, அந்த கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று பேரவை செயலாளருக்கு ஓபிஎஸ்சும் கடிதம் தந்துள்ளார்.

லெட்டர்கள்
இப்படி இரு தரப்பிலுமே கடிதங்கள் பறந்துள்ளன.. ஆனால், இதுகுறித்து பேரவை செயலகம் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப் போவதில்லையாம்.. காரணம், உடனடியாக சட்டப்பேரவை இப்போதைக்கு கூடுகிற சூழல் இல்லை. பேரவை கூடும் நேரங்களில்தான் இது குறித்து சபாநாயகர் ஆராய்ந்து முடிவெடுப்பார் என்கிறார்கள்.. பொதுவாக, இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்று நாம் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் இந்த நடைமுறை குறித்து நம்மிடம் சொன்னதாவது:

ஒப்புதல்
"தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கட்சியில் தலைவருக்கு அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்படும். மற்றொரு கட்சியில் பொதுச்செயலாளரிடம் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். அந்த வகையில், கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர், தனது கட்சியின் சட்டமன்ற பேரவை தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார். அதற்காக எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் ஒப்புதலுடன் அந்த தலைவரை தேர்ந்தெடுப்பர். அதன்பிறகு அவரது பெயரை கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் (யாரிடமும் அதிகாரமிருக்கிறதோ அவர்) பேரவை செயலாளர் வழியாக சபாநாயகரிடம் கடிதம் மூலமாக பரிந்துரை செய்வார்.

ஆக்ஷன்
அதனை சபாநாயகரும் ஏற்றுக்கொள்வார். இதுதான் நடைமுறை... அதிமுகவை பொறுத்தவரை ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பேரவையின் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுவார். அவரது பெயரை கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் அவரே சபாநாயகருக்கு கடிதம் மூலம் பரிந்துரை செய்வார். ஆளும்கட்சியாக இருப்பின், ஆட்சி அமைக்க கவர்னரை சந்தித்து உரிமை கோருவார். தற்போது, அதிமுகவின் பொதுக்குழுவின்படி, தற்காலிக பொதுச்செயலாளராகத்தான் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பொதுச்செயலாளர் தேர்தல் இன்னும் நடக்கவில்லை.

ஆணையம்
அதேபோல, பேரவையின் அதிமுக தலைவர், துணைத்தலைவர் பதவிகள் குறித்து முடிவெடுக்க இப்போதைக்கு எடப்பாடிக்கு அதிகாரம் கிடையாது. அதனால் அவர் கடிதமும் தந்திருக்கத்தேவையில்லை. ஏனெனில், பொதுக்குழுவின் முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதுவே இன்னும் நடக்காமல் இருக்கிறது. ஆணையம் அங்கீகரித்தால்தான் எடப்பாடிக்கான சட்டரீதியிலான அதிகாரம் கிடைக்கும். அதனால், ஆணையத்தின் அங்கீகாரமில்லாமல் எடப்பாடி கடிதம் எழுதியிருப்பதால் , சபாநாயகர் நினைத்தால் ஓபிஎஸ்சுக்கு எதிரான கடிதத்தை நிராகரிக்க முடியும்" என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications