12 கூட இல்லை.. 9 தான்.. இழுக்கும் ஈபிஎஸ்.. யாரெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு? - லிஸ்ட் இதோ!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்து வந்த மூன்று மா.செக்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறியுள்ளதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 9 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு உடன்படாத ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது ஆதரவாளர்களையும் தனது பக்கம் இழுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்துவந்த நெல்லை மாவட்ட செயாலளர் தஞ்சை கணேசராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஆதரவளித்துள்ளனர்.

அதிமுகவில் குழப்பம்
அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கிளம்பிய 'ஒற்றைத் தலைமை' முழக்கம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் எனப் பேசியதைத் தொடர்ந்து, அப்செட்டான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரட்டைத் தலைமையே நீடிக்கும் ஒற்றைத் தலைமைக்கு வாய்ப்பே இல்லை என அவர் அடித்துச் சொன்ன நேரத்தில் எதிர்முகாமில், ஒற்றைத் தலைமைதான் அதுவும் எடப்பாடிதான் எனச் சூளுரைத்து வருகின்றனர்.

ஒற்றைக் காலில்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் கடந்த ஒரு வாரமாக ஆலோசனை நடத்தியும் சுமூகமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையும் சமாதானப்படுத்த கடந்த ஓரு வாரமாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரையும் மாறி மாறி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி தரப்பினர் ஒற்றைத் தலைமை கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். ஓ.பி.எஸ் தரப்பினர் இரட்டைத் தலைமை தான் என ஒற்றைக் காலில் நிற்கின்றனர். ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்ற ஈ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டு வருகிறது.

பொதுக்குழு
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஈபிஎஸ் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும், பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் கையெழுத்திட்ட கடிதத்தை எடப்பாடி பழனிசாமி பெற்று வருகிறார்.

ஆதரவாளர்கள் கல்தா
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது ஆதரவாளர்களையும் தனது பக்கம் இழுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்துவந்த நெல்லை மாவட்ட செயாலளர் தஞ்சைகணேசராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஆதரவளித்துள்ளனர். தச்சை கணேசராஜாவுக்கு ராஜ்ய சபா தேர்தலில் சீட் பெற்றுத் தர ஓ.பி.எஸ் முயற்சித்ததாக கூறப்பட்டது. கடைசியில் ஆர்.தர்மருக்கு சீட் கிடைத்தது. இந்நிலையில், தச்சை கணேசராஜா எடப்பாடி ஆதரவாளராக மாறியுள்ளார். இதேபோள திருவள்ளுவர் தெற்கு மா.செ அலக்சாண்டரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறியுள்ளார்.

தென் மாவட்ட புள்ளிகளும்
இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளராக இருந்த 12 மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 9-ஆக குறைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கிட்டத்தட்ட 65 மாவட்ட செயலாளர்களை கைக்குள் வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோரும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக உள்ளனர்.
Recommended Video

ஓ.பி.எஸ் அணி
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நிற்கிறார். தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மா.செ அசோகன், திருவள்ளூர் வடக்கு மா.செ சிறுணியம் பலராமன், திருச்சி மாநகர் மா.செ வெள்ளமண்டி நடராஜன், தஞ்சாவூர் வடக்கு மா.செ சுப்ரமணி, பெரம்பலூர் மா.செ ராமச்சந்திரன், அரியலூர் மா.செ தாமரை ராஜேந்திரன் ஆகியோர் மட்டுமே ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications