செம எதிர்பார்ப்பு.. காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மும்முனை போட்டி.. இறுதி வேட்பாளர் லிஸ்ட் இன்று வெளியீடு
சென்னை: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 3 வருடங்களாகவே தலைவர் யாருமில்லை.. சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்தாலும், நிறைய பூசல்கள் கட்சிக்குள் வலுத்து வந்தது.
எம்பி தேர்தலும், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருவதால், காங்கிரஸ் நிறைய நெருக்கடிகளுக்கு ஆளாகும் சூழலில் உள்ளது.
வயது 80.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் ஆதரவை பெற்ற மல்லிகார்ஜூன கார்கே.. எப்படி? யார் இவர்?

தலைவர் பதவி
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான மனுத் தாக்கல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கும். ஓட்டுகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ட்விஸ்ட்
இதில் ராகுல் போட்டியிடுவாரா, இல்லையா என்ற நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அவர் போட்டியிடாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், தேர்தலில் குதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை.. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

யார், யார் போட்டி
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை எம்பியுமான திக்விஜய்சிங், போட்டியிடப்போவதாக அறிவித்தார்... மற்றொருபுறம், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக திக்விஜய சிங் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார்... அந்தவகையில் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல்கள் நிறைவடைந்துள்ளன.

இறுதிப்பட்டியல்
இன்றைய தினம், அதாவது அக்டோபர் 1ம் தேதி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.. இந்த தகவலை அக்கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி நேற்றே தெரிவித்திருந்தார்.. அவர் சொல்லும்போது, "மல்லிகார்ஜுன கார்கே 14 படிவங்களை தாக்கல் செய்துள்ளார். சசி தரூர் 5 படிவங்களும், கே.என் திரிபாதி ஒரு படிவமும் தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை நாளை (இன்று) பரிசீலனை செய்து, நாளையே (இன்றே) வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம்.

இன்று லிஸ்ட்
தேர்தலில் போட்டியிடும் 3 பேரில் யாரும் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை. அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள். கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையில் நடுநிலை வகிப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் அவரது ஆதரவு உள்ளது என சொன்னால், அது தவறானது என்றும் தெளிவாக விளக்கம் கூறியுள்ளார்" என்றார். அந்தவகையில், காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்று பிற்பகல் மூன்று மணியுடன் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்றைய தினம் இறுதி வேட்பாளர் லிஸ்ட் வெளியாக உள்ளது.. இதனால், காங்கிரஸில் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.