சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’புதுமைப் பெண் திட்டம்’ குறிப்பிடும் இந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் யார்? நிஜமான புரட்சிப் பெண்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வரலாற்று முக்கியத்துவம் பெற்ற 'புதுமைப்பெண்' திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் துவக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டுள்ளார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை கிடைக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ளது இந்தப் "புதுமைப் பெண்" திட்டம்.

மு.கருணாநிதி 1989 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது 8ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதியாக ரூபாய் 5ஆயிரத்தை வழங்கும் திட்டத்திற்கு இராமாமிர்தம் அம்மையாரின் பெயரைச் சூட்டினார்.

திராவிட அரசியலில் ஆகப் பெரும் ஆளுமையாக வலம் வந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். ஆனால் அவரது தியாகத்திற்கு ஏற்ற அளவு வரலாற்றில் அவரது புகழ் வெளிச்சம் பெறவில்லை. அதை உணர்ந்தே இராமாமிர்தம் அம்மையாரைப் பெயரைத் தனது திட்டத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் போய்ச் சேர்க்கும் காரியத்தில் கருணாநிதி ஈடுபட்டார். ஆனாலும் இன்றைக்கு மூவலூர் இராமாமிர்தம் யார் எனக் கேட்டால், பலருக்கும் தெரியாது.

 பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணம் திராவிடர் இயக்கம்:முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணம் திராவிடர் இயக்கம்:முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

 யார் இந்த மூவலூர் இராமாமிர்தம்?

யார் இந்த மூவலூர் இராமாமிர்தம்?

காங்கிரஸ் இயக்கத்தின் முதல் பெண் மேடைப் பேச்சாளர். பெண்கள் கல்வி அறிவு பெறமுடியாமல் கூண்டுக்கிளியாக வாழ்ந்த காலத்தில், 'தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' என்ற தலைப்பில் சமுதாய விழிப்புணர்வு நாவலை எழுதியவர்.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இராமாமிர்தம் அமையார் படித்தது தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம்தான். சங்கீத குடும்பத்தில் இந்த இருமொழிகள்தான் அன்றைக்குப் பயிற்று மொழி. ஆகவே அவர் தமிழ் படிக்கவில்லை. தமிழ்நாட்டில் திரு.வி.க. நடத்திய 'நவசக்தி' பத்திரிகையைப் படித்து அரசியல் அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் சிங்காரவேலு பண்டிதரிடம் முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரைக் காங்கிரஸ் மேடைகளில் வீரநடைப் போட வைத்தவர் திரு.வி.க. ஆகவேதான் அவரது பத்திரிகையால் ஈர்க்கப்பட்டார் இந்த அமையார்.
தமிழ்நாடு என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியாக இருந்த காலம். தேவதாசி முறை தலைவிரித்து ஆடிய காலம். அதை ஒழிக்கவேண்டி வெகுண்டு எழுந்தார் மூவலூர் அம்மையார். அதன் பின் என்ன நடந்தது?

ஆய்வாளர் பா.ஜீவசுந்தரி

ஆய்வாளர் பா.ஜீவசுந்தரி

இவரைப் பற்றி ஆய்வு செய்தவர் பா. ஜீவசுந்தரி. 'மூவலூர் இராமாமிர்தம்: வாழ்வும் பணியும்' புத்தகத்திற்காகப் பல வருடங்கள் உழைத்தவர் அவரிடம் பேசினோம். "பொதுவாக அந்தக் காலத்தில் தேவதாசியாக யாரைப் பொட்டுக் கட்டுவார்கள் என்றால், ஆண்வழி வாரிசாக வரும் பெண் பிள்ளைக்குக் கட்டமாட்டார்கள். பெண் வழியாக வரும் பெண்ணுக்கு மட்டுமே பொட்டுக் கட்டுவார்கள். இராமாமிர்தம் அம்மையார் ஆண் வழி வாரிசு. ஆகவே அவருக்குப் பொட்டுக் கட்டவில்லை. இராமாமிர்தம் அம்மையாரின் 2 அத்தைகளுக்குப் பெண் வாரிசு இல்லை. ஆகவே அவர்கள் இராமாமிர்தத்தை தத்து கேட்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே தத்து எடுக்கும் உரிமை சட்டரீதியாக இருந்தது. அதில் விதிவிலக்காக, தேவதாசி பெண்கள் மட்டும் தத்து எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள். ஏனென்றால் அவர்களின் வாரிசு தடைப்பட்டுவிட்டால், அந்தத் தொழில் நின்றுவிடும். ஆகவே இந்த ஏற்பாடு.

இராமாமிர்தத்தின் தந்தை தன் மகளைத் தத்துக் கொடுக்க சம்மதிக்கவில்லை. இதனால் குடும்பத்தில் விரிசல் விழுகிறது. சொந்த ஊரான திருவாரூரிலிருந்து தனது மனைவி, குழந்தையுடன் மூவலூருக்கு குடிபெயர்ந்துவிடுகிறார் இராமாமிர்தத்தின் தந்தை. அங்கே வறுமை. பசி, பட்டினியால் சென்னைக்கு வேலை தேடிப் போகிறார். அவரைப் பின் தொடர்ந்து அவரது மனைவி, ஊரிலுள்ள ஆட்சிக்கண்ணு அம்மாவிடம் இராமாமிர்தத்தை 10 ரூபாய் ஒரு பழைய புடவைக்குக் கொடுத்துவிட்டு சென்னைக்கு கணவரைத் தேடிப் போய்விடுகிறார்" என பழைய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பேசுகிறார் ஜீவசுந்தரி.

 தேவதாசிகள் எதிர்ப்பு

தேவதாசிகள் எதிர்ப்பு

"அதன்பின் ஆட்சிக்கண்ணு அம்மா, இராமாமிர்தம் வளர்ந்ததும் பொட்டுக் கட்டிவிட முயற்சிக்கிறார். வெளியூரிலிருந்து வந்து ஒரு பெண்ணிற்குப் பொட்டுக் கட்டினால் தங்களின் தொழில் பாதிக்கும் என அவ்வூர் தேவதாசிகள் எதிர்க்கிறார்கள். ஆகவே அந்த ஆபத்திலிருந்து விடுதலை பெறுகிறார் இராமாமிர்தம். அதன்பிறகு 'பேரளம்' ஊரைச் சேர்ந்த சுயம்பு பிள்ளை மணக்கிறார். இதுகூட முறையான திருமணம் இல்லை" என்றவரிடம் அவரது போராட்ட வாழ்க்கை வரலாற்றைக் கேட்டோம். "தமிழ்நாட்டில் தேவதாசி ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முதல் முயற்சி எடுத்தவர் இராமாமிர்தம்தான். சின்ன அளவில் இந்த விழிப்புணர்வைத் தொடங்கியவர், பின் இந்தியா முழுமைக்கும் இந்தக் கொடுமை நடப்பதை அறிகிறார்.

மேடையில் கூந்தலை அறுத்தனர்

மேடையில் கூந்தலை அறுத்தனர்

ஆகவே 'நாகபாசத்தார் சங்கம்' என்றும் பிறகு 'பொட்டு அறுப்பு சங்கம்' என்றும் இயக்கத்தை நிறுவிப் போராடினார். முதல் மாநாடு அவரது சொந்த செலவில் மூவலூரில் நடந்தது. அடுத்த மாநாடு மயிலாடுதுறையில் நடந்தது. அதற்குத்தான் ஆந்திராவிலிருந்து யமுனா பூர்ண திலக்கம்மா வரவழைக்கப்பட்டார். அவரும் தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர். இருவரும் இணைந்து இந்திய அளவில் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இராமாமிர்தம் அம்மையாரின் அத்தனை முயற்சிக்கும் பெரியார் உடன் நின்றார்" என்கிறார் ஜீவசுந்தரி. "தேவதாசி ஒழிப்பில் தீவிரம் காட்டிய இராமாமிர்தம் அம்மையாரை மேடையில் வைத்தே சில சனாதன வெறியர்கள் அவரது கூந்தலை அறுத்தனர். அதன் பின் அவர் கூந்தல் வளர்ப்பதை நிறுத்துவிட்டு, கிராப் தலையுடன் வலம் வந்தார்.

மூவலூர்

மூவலூர்

இவரால் ஈர்க்கப்பட்டுத்தான் டாக்டர் முத்துலெட்சிமி ரெட்டியே தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். 1930களில் தொடங்கிய இந்தப் போராட்டம் 1947இல் தான் நடைமுறைக்கு வந்தது. அதுவரை ஓய்ந்துப்போகாமல் போராடியவர் மூவலூர் அம்மையார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் ஆய்வுக்காக ஜீவசுந்தரி, பல காலம் ஆவணக்காப்பகளில் அவரைப் பற்றிய குறிப்புக்களைத் தேடிச் சேகரித்தவர். மூவலூர் அருகேதான் இவரது வீடு. ஆனால் சென்னைக்குப் பல ஆண்டுகள் முன்பே குடியேறிவிட்டார். மீண்டும் இராமாமிர்தம் வீட்டைப் பார்ப்பதற்காகவே மூவலூர் சென்றுள்ளார்.

English summary
Moovalur ramamirtham ammaiyar scheme: Moovalur Ramamirtham is a great personality hidden in history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X