செந்தில்பாலாஜி மீது அண்ணாமலைக்கு ஏன் ஆத்திரம்? “தூக்கிப்போட்டு துவைச்சு எடுத்தாரே” - முரசொலி பதிலடி!
சென்னை : 'என்னதான் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் சில ஜீவன்கள் வாலைக் குழைத்து எதையோ தின்னத்தான் செல்லுமாம்..' என்ற சொலவடையைக் குறிப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளது திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.
அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, சமீப நாட்களாக அவரை 'சாராய அமைச்சர்' எனக் குறிப்பிட்டு வருகிறார்.
செந்தில் பாலாஜி விமர்சனம் பற்றி நேற்று செய்தியாளர்கள் தன்னிடம் கேள்வி எழுப்பியபோது, பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாகப் பேசினார் அண்ணாமலை.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மீது ஏன் அண்ணாமலைக்கு ஆத்திரம் எனக் கேள்வி கேட்டு பதிலும் சொல்லியுள்ளது முரசொலி நாளேடு.

செந்தில் பாலாஜி vs அண்ணாமலை
தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றது முதலே அண்ணாமலை, திமுக அரசையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். அதிலும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தீவிரமாக தாக்கிப் பேசி வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலின்போதே செந்தில் பாலாஜியை ஸ்பெஷலாக குறிவைத்து அண்ணாமலை அட்டாக் செய்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

சாராய அமைச்சர்
அண்ணாமலை குற்றச்சாட்டு - செந்தில் பாலாஜி பதிலடி என இந்த மோதல் போக்கு நீண்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மூலம் வந்த வருமானம் தொடர்பாக தவறான தகவலைப் பரப்பும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்ததைக் குறிப்பிட்டு, அவரை 'சாராய அமைச்சர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி அண்ணாமலை விமர்சித்தார். தொடர்ந்து அந்த சொற்றொடரை பயன்படுத்தி வருகிறார்.

செந்தில் பாலாஜி
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்ணாமலை திமுக அரசை விமர்சித்து வந்த நிலையில், உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர் இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு இந்தத் தகவல்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக என்.ஐ.ஏ முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

பத்திரிகையாளர்கள் மீது கோபம்
செந்தில் பாலாஜி அவ்வாறு கூறியது பற்றி நேற்று கடலூரில் செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேட்க முயன்றபோதுதான் அவர், 'மரத்து மேல் குரங்கு தாவுவது போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள்' என பத்திரிகையாளர்களிடம் கோபப்பட்டார். மேலும், நாய், பேய், சாராய அமைச்சர் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என ஆவேசமாகக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இத்தனை கோபம்?
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவருக்கும் இடையே நடக்கும் தொடர் மோதல் குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், 'ஒரு கேள்வி ஒரு பதில்' என்ற தலைப்பில் ஒரு பத்தி வெளியாகியுள்ளது. அது பின்வருமாறு:
கேள்வி: தமிழ்நாட்டு பாஜக தலைவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் எனப் பேசி தனது தரம் எப்படிப்பட்டது என்பதை காண்பித்துள்ளாரே பார்த்தீர்களா ? ஏன் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அத்தனை கோபம் வருகிறது?

வராதா பின்னே
பதில்: வராதா என்ன? முதலமைச்சர் கனவோடு, நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு, தான் வகித்த உயர் போலீஸ் பதவியை உதறிவிட்டு தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தார். அரவக்குறிச்சி தொகுதியில் ஆசையோடு போட்டியிட்ட அவரை தோல்வியை சந்திக்க வைத்து ஒரு எம்எல்ஏ கூட ஆக முடியாத அளவு 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என ஓட ஓட விரட்டி அடித்தார் செந்தில் பாலாஜி.

துவைத்து எடுத்தாரே
செந்தில் பாலாஜியை தூக்கிப்போட்டு மிதித்து விடுவேன் என அரவக்குறிச்சியில் பேசிய அந்த பேர்வழியை தேர்தல் களத்தில் தூக்கிப்போட்டு செந்தில் பாலாஜி துவைத்து எடுத்ததை தேர்தல் முடிவு அறிவித்தது. அந்த ஆத்திரத்தில் அறிவு கெட்ட தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

என்னதான் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்
அந்தக் காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் கேட்டதில்லையா? அதாவது, 'என்னதான் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் சில ஜீவன்கள் வாலைக் குழைத்து எதையோ தின்னத்தான் செல்லுமாம்.. அந்த ரகப் பேர்வழியிடம் இதை விட இது போன்ற பேச்சை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்!" என முரசொலியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications