அதிர வைக்கும் ஆம்னி பஸ்கள்.. குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுளை ரத்து செய்தது ஏன்?
என்றசென்னை: அக்டோபர் 19, 20ம் தேதி ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 17, 18 சனி, ஞாயிறு வருகிறது. ஒட்டுமொத்தமாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. அதேபோல் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ம் தேதி ஞாயிறு வருகிறது. அதனையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறைவிடப்படும். இந்த பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்ல சில நாட்களுக்கு முன்பு குறைந்த கட்டணத்தில் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் பேருந்து பழுதடைந்து விட்டதாகக் கூறி அந்த டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு, அதே பேருந்துகளில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன ஆம்னி பேருந்து நிறுவனங்கள்.
ஆம்னி பேருந்துகளுக்கு முறையான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யவே இல்லை.. செய்யவும் முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. ஏனெனில் அரசுப் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள் போன்றவை "தடப் பேருந்துகள்" என்ற வகையின் கீழ் வரும். இவற்றுக்குச் செல்லும் வழித்தடம், நிறுத்தங்கள் மற்றும் கட்டணங்களை அரசே நேரடியாக நிர்ணயம் செய்யச் சட்டத்தில் இடமிருக்கிறது.

ஆனால் ஆம்னி பேருந்துகள் "ஒப்பந்த ஊர்திகள்" என்ற உரிமத்தின் கீழேயே இயங்குகின்றன. எனவே பயணிகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து குறிப்பிட்ட இடத்திற்குப் பயணிப்பதாகக் கணக்கில் கொள்ளப்படும். மோட்டார் வாகனச் சட்டப்படி இந்த ஒப்பந்த ஊர்திகளுக்குக் கட்டணத்தை அரசே நேரடியாக நிர்ணயிப்பது சட்டப்பூர்வமாகக் கடினமாகும். தனியார் ஆம்னி பேருந்துகள் முழுமையாகச் சந்தை விதிகளின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன.
விமான மற்றும் ரயில் டிக்கெட்டுகள் போலவே, தேவை அதிகம் உள்ள பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் விலையை உயர்த்தும் "டைனமிக் பிரைசிங்" முறையை பின்பற்றுகிறார்கள். இது விமானத்தை போல் தனியார் சேவை என்பதால், அரசு தலையிட முடியாது.
அதுமட்டுமல்ல சாதாரண நாட்களில் கூட்டமே இல்லாதபோது மிகக் குறைந்த கட்டணத்திற்கு பேருந்துகளை இயக்கி நஷ்டத்தைச் சந்திப்பதாகவும், பண்டிகை நாட்களில் மட்டுமே லாபம் ஈட்ட முடிவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். எனவே இதில் தலையிட முடியாத நிலையே அரசுக்கு உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம்.
அக்டோபர் 19, 20-ல் ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாட்களாக அக்டோபர் 17, 18 சனி, ஞாயிறு வருகிறது. இந்த 4 நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், கடந்த வாரமே ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டார்கள். அதேபோல் நவம்பர் மாதத்தில் தீபாவளி விடுமுறை பயணத்துக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள். இந்த முன்பதிவின் போது சாதாரண நாளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறைக்காக கடந்த வாரம் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு எஸ்எம்எஸ் சென்றுள்ளது. அதில், நீங்கள் முன்பதிவு செய்திருந்த பேருந்து பழுதடைந்துள்ளதால் முன்பதிவு செய்திருந்த டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்ததை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சியடைந்தார்கள்.
டிக்கெட் ரத்தானவர்கள் அதேநாளில் அதே பேருந்தில் மறுபடியும் டிக்கெட் முன்பதிவுக்கு முயலும்போது கட்டணம் 3 மடங்கு உயர்ந்திருந்துளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மதுரையிலிருந்து கோவைக்கு ரூ.700 கட்டணம் இருந்த பேருந்து தற்போது ரூ.1,500 ஆக இருக்கிறது. கோவை உள்பட பல்வேறு ஊர்களுக்கும் கட்டணம் அப்படியே இருமடங்கு, 3 மடங்காக இருக்கிறது. பண்டிகை நாளில் டிக்கெட் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கும் நோக்கத்தில் பேருந்து பழுதடைந்ததாக கூறி முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்துள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வெளிப்படையாகவே ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களிலேயே வெளியிட்டு வசூலித்த போதிலும் சட்ட ரீதியாக அரசால் தடுக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. இது ஒருபுறம் எனில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட இருக்கிறார்கள். இதனால், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து, மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு 2000, 4000 ரூபாய் கூட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சமே இன்று 1200 என்கிற அளவில் தான் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications
