சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகர் விவேக் பெயரில் சாலை.. அதிரடியாக வெளியான அரசாணை.. ஏன் இப்படி? முணுமுணுக்கும் "உடன்பிறப்புகள்"

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவிற்கு விவேக் பெயரை வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமீபத்தில் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அந்த தெருவிற்கு விவேக் பெயரைச் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதுவே இப்போது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் விவேக். பகுத்தறிவு - சமூக கருத்துகளை அனைவருக்கும் புரியும் வகையில் திரைப்படங்களில் கூறியவர் விவேக். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் மிகவும் பிடித்தவர் விவேக்.

Why DMK government celebrates Actor Vivek this much? DMK Cadres outrage

முன்னாள் முதல்வர் கருணாநிதி விவேக்கிற்கு 'சின்னக் கலைவாணர்' எனப் பட்டம் சூட்டினார். அதுவே, அவரது பெயரோடு நிலைத்தது. நடிகர் விவேக்கிற்கு 2009ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை 5 முறை வென்றுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டு 1 கோடி மரம் நடும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தினார் விவேக். மரம் நடுவது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், அடுத்த நாள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் உயிரிழந்தார். விவேக்கின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் விவேக் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு விவேக் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலை "சின்ன கலைவாணர் விவேக் சாலை" என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பெயர்ப்பலகையை நாளை திறந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விவேக் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்த்த முதல்வரின் செயல், தி.மு.க தொண்டர்கள் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவென்றால், விவேக் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமானவராக பரவலாக அறியப்பட்டிருந்தாலும், அவர் ஜெயலலிதாவையும் போற்றியவர் ஆவார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சி, சோவுக்கு நடந்த விழா என விவேக் ஜெயலலிதாவின் ஆதரவாளர் போலவே செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது நடிகர் விவேக் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இவற்றையெல்லாம் அறிந்தும், விவேக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, உடனடியாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும், கட்சிக்காக உழைத்த தியாகத் தொண்டர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என்றும் திமுகவினர் முணுமுணுத்து வருகின்றனர்.

English summary
The street which late actor Vivek lived is named 'Chinna Kalaivanar Vivek Salai' caused outrage among DMK cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X