அவரை நீக்குனீங்களே.. சண்முகத்தை தூக்க முடியுமா? 16 எம்எல்ஏக்கள் கையில்! அதெல்லாம் எடப்பாடி மறப்பாரா?
சென்னை : சமீபத்தில், திமுக - பாஜக கூட்டணி அமையப்போகிறது என அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் பேசியது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுபற்றி எடப்பாடி பழனிசாமி எந்த ஆக்ஷனும் எடுக்காதது பற்றி ஓபிஎஸ் தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி ரூட் போட்டுக் கொடுத்துதான் சி.வி.சண்முகம் பேசி இருப்பார் என விமர்சிக்கப்படும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி போன்றோரும் சி.வி.சண்முகம் பேச்சை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், கூட்டணியில் இருந்த பாமக பற்றி பேசியதற்காக புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜக பற்றி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கும் சி.வி.சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் விமர்சித்துள்ளனர்.

சிவி சண்முகம்
அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையப்போகிறது, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்போகிறது. திமுகவிடம் ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரஸை கழற்றி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது, திமுகவும் அதற்கு தயாராகிவிட்டது எனப் பேசினார்.

பாஜகவில் சேர்ந்துவிட்டாரா?
சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்தக் கட்சி, எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. யாரோ சில மூன்றாம் கட்ட தலைவர்கள், பாஜகவும் திமுகவும் கூட்டணி வைக்கிறார்கள் என்று பேசுகிறார்கள் என்றால் அவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது திமுகவில் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் பதில் சொல்கிறேன் எனத் தெரிவித்தார்.

ஜெயக்குமார்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் இன்னும் ஓராண்டில் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டுவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடித்து வருகிறது திமுக. எனவே அதை கண்கூடாக பார்த்துத் தான் சிவி சண்முகம் இப்படி கூறியுள்ளார். உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என உறவு வைத்துக் கொள்வதில் திமுக போன்று ஒரு சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியலை வேறு எந்த கட்சியும் செய்யாது எனத் தெரிவித்தார்.

பாஜக கூட்டணி வேண்டாம்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், பாஜக உடன் திமுக கூட்டணி அமைக்கப் போவதாக பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் விரும்பவில்லை. பாஜக கூட்டணியால், சிறுபான்மை வாக்குகள் பறிபோகின்றன, தங்கள் வெற்றி பாதிக்கப்படுகிறது, பாஜக கூட்டணி வேண்டாம் என அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இந்த அடிப்படையிலேயே அவர்கள் பாஜக கூட்டணிக்கு எதிராகப் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.

எடப்பாடி பிளான்
மறுபுறம், எடப்பாடி பழனிசாமியின் பிளான் படி தான் இதெல்லாம் நடக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாஜகவின் நெருக்கடி வளையத்திற்குள் இருக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி, கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்து விட்டார், பாஜக கூட்டணியில் இருந்து விலகி, பாமக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து மெகா கூட்டணியை அமைக்க ஈபிஎஸ் தயாராகி விட்டார் என்கிறார்கள். அதன் காரணமாகவே, எடப்பாடி தரப்பில் இருந்து பாஜகவை விமர்சிக்கும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன என்கிறார்கள்.

சண்முகம் மீது நடவடிக்கை இல்லையே
இது ஒருபுறம் இருக்க, ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கூட்டணிக் கட்சியான பாஜக பற்றி அவதூறாகப் பேசிய சிவி சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் முடிந்த சமயத்தில், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக பற்றி விமர்சித்த பெங்களூர் புகழேந்தி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதுபோல, பாஜகவை விமர்சித்திருக்கும் சிவி சண்முகத்தை ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர் ஓபிஎஸ் அணியினர்.

பாமக பற்றி புகழேந்தி
2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஓபிஎஸ் பற்றி விமர்சித்திருந்தார். அதற்கு எதிர்வினையாக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, பாமகவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் பாமகவுக்கு எந்தவிதமான வேலையும் இல்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார். பாமக வலுவாக உள்ள பகுதிகளில் எல்லாம் முழுவதுமாக அதிமுக தோற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என விமர்சித்திருந்தார்.

புகழேந்தி நீக்கம்
இதையடுத்து கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், புகழேந்தி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கையெழுத்து போட்டு புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கி இருந்தாலும், ஈபிஎஸ்ஸே இந்த முடிவில் உறுதியாக இருந்ததாகக் கூறப்பட்டது. அப்போது முதலே, எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையாக விமர்சித்து வரும் புகழேந்தி தற்போது, ஓபிஎஸ் அணியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார்.

அவ்வளவுதான் பவர்
இந்நிலையில் தான், தற்போது பாஜக பற்றி விமர்சித்திருக்கும் சி.வி.சண்முகத்தை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டுத் தூக்குவாரா என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஓபிஎஸ் அணி நிர்வாகியான நாஞ்சில் கோலப்பன், கூட்டணியில் இருக்கும் பாஜக பற்றி சி.வி.சண்முகம் பேசியதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்திருக்கும் நிலையில், எடப்பாடி சைலண்டாக இருக்கிறாரே? சி.வி.சண்முகத்தை எடப்பாடி பழனிசாமியால் நீக்க முடியாது, எடப்பாடி பழனிசாமிக்கு அவ்வளவுதான் பவர் என விமர்சித்துள்ளார்.

16 எம்.எல்.ஏக்களை
அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன், தன்னுடன் பேசிய போன் உரையாடலைக் குறிப்பிட்டுள்ள நாஞ்சில் கோலப்பன், சி.வி.சண்முகம் தனது கையில் 16 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியை மிரட்டி ராஜ்யசபா எம்.பி சீட் வாங்கிவிட்டார் என பொன்னையன் தெரிவித்திருந்தார். சிவி சண்முகம் கையில் எம்.எல்.ஏக்கள் இருப்பதால், அவரை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி பேசமாட்டார் என விமர்சித்திருக்கிறார் நாஞ்சில் கோலப்பன்.

மா.செவை மாற்ற முடியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு, தனது அணியில் பவர் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூத்தியும் விமர்சித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியை ஏதாவது ஒரு மாவட்டத்தில் மாவட்ட செயலாளரை மாற்றச் சொல்லுங்கள் பார்க்கலாம். அதிமுக, எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை. எல்லோரும், எடப்பாடியை கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அசைய வேண்டும் என்றால் கூட வேலுமணியை கேட்காமல் அசைய மாட்டார் என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications