டிஜிபியை கூப்பிடுங்க சார்.. உடனே மீட்டிங் போடுங்க! போலீசார் மீதே தாக்குதல்.. முதல்வர் விஜய் மௌனம்!
சென்னை: ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் மிக முக்கியமான உள்துறைப் பொறுப்பைத் தன் கைவசம் வைத்துள்ள முதலமைச்சர், மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான குற்றங்கள் அரங்கேறும் இக்கட்டான காலகட்டத்தில் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு வினாடியும் யோசிக்காமல், உடனடியாக மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறைச் செயலாளர் மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகளைத் தனது அறைக்கு நேரில் வரவழைத்து, போர்க்கால அடிப்படையில் ஓர் அவசர ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்.
"மாநிலத்தில் என்ன நடக்கிறது? ரவுடிகளுக்கும் போதைக்கும்பல்களுக்கும் இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? மாயமான குழந்தைகளை மீட்க என்ன திட்டம் உள்ளது? குற்றவாளிகளை ஒடுக்க காவல்துறைக்கு என்னென்ன தேவைகள் உள்ளன?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பி, ஒட்டுமொத்தக் காவல் துறையையும் சுறுசுறுப்பாக முடுக்கிவிட்டிருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் தலைநகர் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை தினமும் பட்டப்பகலில் வெட்டுக் கொலைகளும், குழந்தைக் கடத்தல்களும், ஏன் காவல்துறையினர் மீதே தாக்குதல்களும் நடந்து வரும் இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய் அத்தகையதொரு தீவிர ஆய்வுக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நேரடி நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் களத்திலும் சாமானிய மக்கள் மத்தியிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
போலீஸ் அதிகாரி மீதே பாய்ந்த கத்தி: அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்
சமீபத்தில் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தின் வாசலிலேயே, கஞ்சா போதையில் இருந்த ஒரு வாலிபர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்களைக் கத்தியால் தாக்கியதோடு நில்லாமல், தன்னைத் தடுத்துப் பிடிக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே (SI) வெட்ட முயன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியது. அந்த அதிகாரி தனது இடுப்பு பெல்ட்டை உருவி சுழற்றித் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதால்தான் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
சீருடையில் இருக்கும் ஓர் அதிகாரிக்கே பொது இடத்தில் பாதுகாப்பு இல்லாதபோது, கையில் எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத சாமானிய மனிதனுக்கு யார் பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது. ராயப்பேட்டை சார்மினார் பிரியாணி கடையில் இரு சிறுவர்கள் பட்டாக் கத்தியுடன் புகுந்து காசாளரைத் தாக்கியது, சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் பட்டப்பகலில் துரத்தித் துரத்தி வெட்டிக் கொல்லப்பட்டது என 90-களின் இருண்ட அரிவாள் கலாச்சாரம் மீண்டும் தமிழக வீதிகளில் உலா வரத் தொடங்கியுள்ளது.
48 மணி நேரக் கெடு: கஞ்சா மாஃபியாக்களை வேரறுக்க உத்தரவு எங்கே?
செங்குன்றம் சம்பவமாக இருந்தாலும் சரி, சமீபகாலமாக இளைஞர்கள் கைகளில் அரிவாள்களைத் தூக்கும் போக்காக இருந்தாலும் சரி, அதன் பின்னணியில் இருப்பது கட்டுக்கடங்காமல் புழங்கும் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதைப்பொருட்கள்தான்.
உள்துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் உடனடியாக டிஜிபியைக் கூப்பிட்டு, "தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நெட்வொர்க்குகளை அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூண்டோடு அழிக்க வேண்டும்; பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் கஞ்சா விற்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட வேண்டும்" என்று ஒரு துளி கூட சமரசமின்றி இரும்புக்கரம் கொண்ட அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்க வேண்டாமா?
காவல்துறையினர் தைரியமாகத் தங்களது பணிகளைச் செய்ய அவர்களுக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். அதே சமயம், தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன உபகரணங்களும் தெளிவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசுத் தரப்பில் அத்தகைய வெளிப்படையான கள நடவடிக்கைகள் எதுவும் தெரியவில்லை என்பதே கள எதார்த்தமாக உள்ளது.
கோட்டைக்குள் முடங்கும் 'TSR' ரகசிய அறிக்கைகள்
இந்த நிர்வாகச் சுணக்கத்திற்குப் பின்னணியில் தலைமைச் செயலகத்தில் நிலவும் அதிகார மோதல்களே முக்கியக் காரணம் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஒரு மாநிலத்தின் உளவுத்துறை திரட்டும் தினசரி ரகசிய அறிக்கை என்பது முதலமைச்சரின் நேரடிப் பார்வைக்காக மட்டுமே சமர்ப்பிக்கப்படும் மிக முக்கியமான ஆவணமாகும். மாநிலத்தில் எங்கே பதற்றம் உருவாகிறது, எந்தக் குற்றக் கும்பல் மீண்டும் தலைதூக்குகிறது என்பதை அந்த அறிக்கையைப் பார்த்து முதலமைச்சர் உடனுக்குடன் உத்தரவிட வேண்டும்.
ஆனால், தற்போதைய சூழலில் இந்த ரகசிய உளவு அறிக்கைகளை முதல்வர் முழுமையாகப் படித்து முடிவெடுப்பதில்லை என்றும், அது ஒரு தேர்தல் வியூக வகுப்பாளரின் கைகளுக்கும், அமைச்சரவையில் உள்ள குறிப்பிட்ட இரு முக்கிய அமைச்சர்களின் பார்வைக்கும் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உளவுத்துறை தரும் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் முதல்வரின் நேரடி நடவடிக்கையாக மாறாமல், அரசியல் கணக்குகளிலேயே நேரம் வீணடிக்கப்படுவதால், கீழ்மட்டத்தில் உள்ள களக் காவல்துறையினர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். இதன் விளைவாகவே ரவுடிகளும் போதைக்கும்பல்களும் அச்சமின்றிச் சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.
மாயமாகும் குழந்தைகள்: பெற்றோரின் தூங்காத கண்கள்
சட்டம்-ஒழுங்கு பலவீனமடைந்துள்ளதன் உச்சகட்ட விளைவாக, தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளும் பள்ளி மாணவிகளும் அடுத்தடுத்து மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன:
செஞ்சியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயமாகி பல நாட்களாகியும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ராணிப்பேட்டை லாலாபேட்டையில் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிய ஒரு வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு வாரங்கள் கடந்தன. ஊத்தங்கரையில் டியூஷனுக்கு லிப்ட் கேட்டுச் சென்ற 12 வயது பள்ளி மாணவன் காணாமல் போனதே மிச்சம். காவேரிப்பட்டினம் சிறுவன், பெரம்பலூரில் இரு பள்ளி மாணவிகள் மாயமானது எனப் பட்டியல் நீள்கிறது.
ஒரு மாநிலத்தின் எதிர்காலமான குழந்தைகளைக் கூட கடத்தல் கும்பல்களிடம் இருந்து பாதுகாக்க முடியாத சூழல் நிலவும் போது, காவல்துறைத் தலைமையை அழைத்து அவசர ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டாமல் அரசு தாமதிப்பது ஏன் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
வெற்று அறிக்கைகள் வேண்டாம்; உடனடி செயல்பாடு தேவை!
ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் வெறும் தேர்தல் வெற்றிகளையும் அரசியல் வியூகங்களையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. பொதுமக்களின் உயிர், உடைமை மற்றும் அமைதியான வாழ்வை உறுதி செய்வதே ஓர் ஆட்சியின் தலையாய தர்மம்.
முதலமைச்சர் உடனடியாக மாநில டிஜிபி, உள்துறைச் செயலாளர் மற்றும் அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுடன் நேரடி ஆய்வுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும். கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தலை அடியோடு ஒழிக்க 48 மணி நேரக் காலக்கெடுவுடன் கூடிய தீவிர தேடுதல் வேட்டையை அறிவிக்க வேண்டும். காவல்துறையினருக்கு முழுச் சுதந்திரம் வழங்கி, ரவுடிகள் மற்றும் கூலிப்படைகளின் கூடாரங்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும். மாயமான அனைத்து குழந்தைகளையும் மீட்கச் சிறப்பு அதிரடிப்படையை களமிறக்க வேண்டும்.
இதை இனியும் செய்யத் தவறினால், ஆளும் தவெக அரசின் மீதும், முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறமை மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை முழுமையாகச் சரிந்துவிடும் என்பதை அரசு உணர வேண்டும்.


Click it and Unblock the Notifications
