நமீதாவும், குஷ்புவும்தான் தாமரையை மலர வைக்க போறாங்களா? வெறும் ஸ்டார் கூட்டம் போதுமா.. சரமாரி கேள்வி
சென்னை: நமீதாவும், குஷ்புவும் சேர்ந்துதான் தாமரையை மலர வைக்க போறாங்களா? வெறும் நட்சத்திர கூட்டம் இருந்தால் கட்சி எப்படி பலப்படும் என்ற சராசரி கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளது.
தமிழக பாஜக தற்போது அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.. அந்த வகையில் குஷ்பு உட்பட பல்வேறு பிரமுகர்கள் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.

இது ஒரு விவாதத்தையே அரசியல் கிளப்பி வருகிறது.. பாஜகவில் தொடர்ந்து நடிகர், நடிகைகள் இடம்பெறுவது வெறும் கவர்ச்சி அரசியலையே பிரதிபலிக்கிறது என்ற கருத்தும் பதிவாகி வருகின்றன. இதை பற்றி நாம் ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:
பாஜகவுல ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா என திரைப்பட்டாளமே இருக்கு.. இப்போ குஷ்பு வந்திருக்காங்க. பொதுவாக, தேர்தல் சமயத்துல இது மாதிரி நட்சத்திரங்களை களமிறக்குவது அதிமுகதான்.. முக்கியமாக ஜெயலலிதா இருந்தபோது, நிறைய பேர் நம்பி கட்சியில் சேருவாங்க.
ஏனென்றால், ஜெயலலிதா ஒரு இன்ஸ்பியரேஷனாக அவர்களுக்கெல்லாம் இருந்திருக்கிறார்.. அதேமாதிரி ஜெயலலிதாவும் உரிய மரியாதை தந்து பேச்சாளராகவோ, பொறுப்பாளராகவோ நியமிப்பார்.. அந்த வகையில் ரோஜா, விந்தியா இப்படி பல பேர் இருக்காங்க. இதே நமீதாவும் அங்கிருந்துதான் இங்கே வந்திருக்காங்க.
இதில் ரோஜா எப்படி பார்த்தீங்கன்னா, அவங்களுடைய ரூட் வேற மாதிரி இருந்தது.. தன்னை வலிமை மிக்க பெண்ணாக மாத்திக்கிட்டாங்க... தெலுங்கானா அரசியல் களத்தில் நிறைய புதுமைகளை செய்தாங்க.. போராட்டங்களை பலப்படுத்தினாங்க.. புதுபுது திட்டங்களை ஜெ.பாணியில் அறிவிச்சாங்க.. அத்தனைக்கும் காரணம் ஜெ.தான்னு சொன்னாங்க. இன்னைக்கு ரோஜா எந்த கட்சிக்கு போனாலும், அவருடன் லட்சக்கணக்கான தொண்டர்களும் கூடவே போகும் அளவுக்கு தனக்கான கூட்டத்தை பலப்படுத்தி வெச்சிருக்காங்க.
அந்த மாதிரிதான் பெண் பிரமுகர்கள் இங்கே அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள்.. இப்போ குஷ்புவை பார்த்தீங்கன்னா, அவங்களுக்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது... இவங்களுடைய நோக்கம், பாஜகவின் செயல்திட்டங்களை தங்கள் பேச்சினால் எல்லா பக்கமும் கொண்டு போய் சேர்ப்பார்கள்.. இந்த ஸ்டார்கள் பேசினால், நிச்சயம் மீடியாக்கள் அந்த செய்திகளை கவர் செய்வார்கள்.
தேர்தல் சமயத்தில், இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டம் அணி திரண்டு வரவும் செய்வார்கள்.. ஆனால் வாக்குவீதத்தை அந்த அளவுக்கு பெற்றுவிட முடியாது.. தாமரை மலர்ந்தே தீரும் என்ற வார்த்தையை நமீதாவால் இன்னும் சரியாக சொல்ல முடியவில்லை.. இப்போது தெருவுக்கு தெரு தாமரை மலரும் என்று குஷ்பு சொல்கிறார்... தமிழிசை செய்யாததையா இவர்கள் எல்லாம் வந்து செய்துவிட போகிறார்கள்?
இப்படி கவர்ச்சி அரசியலை திமுக, அதிமுக என்னைக்கோ செய்தாகிவிட்டது.. பாஜக இப்போதுதான் இந்த ரூட்டை பிடித்து வந்து கொண்டிருக்கிறது.. எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகுமோ தெரியாது.. ஆனால், மக்களிடம் நெருங்கியும், மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து செல்பவர்கள் பின்னால்தான் வாக்குகள் குவிந்துள்ளன என்பது கடந்த கால வரலாறு நமக்கு சொல்லும் பாடம்!" என்றனர்.
இதை பற்றி பாஜக தரப்பில் கேட்டபோது, "ஒரு கட்சி வளருதுன்னா இப்படி நாலு பேர் கிளப்பி விடத்தான் செய்வாங்க.. பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.. அன்னைக்கு இருந்த பாஜக வேற.. வெறும் சினிமாக்காரர்கள் பாஜகவில் இணைகிறார்கள் என்று மட்டும் எப்படி சொல்லலாம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. சிதம்பரத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்ட பெண் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரியும் கட்சியில் சேர்ந்துள்ளார்.. அதனால் எல்லா தரப்பு மக்களின் ஆதரவையும்தான் பாஜக பெற்று வருகிறது.. இதை மாற்று கட்சியினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.. அவ்வளவுதான்" என்றனர்.