அதே 3.. பாஜக பிளானுக்கு குறுக்கே டிடிவி.. “ஸ்ட்ராங்” போச்சே! விட்டுக் கொடுக்குமா? தட்டிப் பறிக்குமா?
சென்னை : பாஜக, தமிழகத்தில் தீவிரமாகக் குறிவைக்கும் 8 தொகுதிகளில் 3 தொகுதிகளை தினகரனும் கணக்குப் போட்டிருக்கிறாராம். அமமுக தென் மாவட்டங்களில் வலுவாக இருக்கும் நிலையில், 6 தொகுதிகளைக் கேட்டுப் பெறும் திட்டத்தில் இருக்கிறாராம் தினகரன்.
பாஜக இரட்டை இலக்க சீட்களில் நிற்கத் தயாராகி வருகிறது. அதிலும் குறிப்பாக 8 தொகுதிகளை குறிவைத்து ஏற்கனவே வேலைகளைத் தொடங்கி விட்டது பாஜக. இப்போது, அணியை பலமாக்க டிடிவி தினகரனையும் கூட்டணியில் கொண்டு வர பாஜக தீவிரமாக முயன்று வரும் நிலையில், பாஜக வேலை செய்து வரும் 8 தொகுதிகளில் 3 தொகுதிகளை தனக்கு வலுவானது என தினகரன் கருதுகிறாராம்.
இந்த 3 தொகுதிகளில் நின்றால் சுயர் ஷாட் அடிக்கலாம் என தினகரன் கருதும் நிலையில், அவற்றில் ஏற்கனவே பாஜக தேர்தல் வேலைகளை தொடங்கியிருப்பதால், அவற்றை விட்டுக் கொடுக்குமா என்ற கேள்விகளும் அமமுக மற்றும் பாஜகவுக்குள் எழுந்திருக்கின்றன.

பாஜகவின் வியூகம்
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். அதற்காக தமிழகத்தில் குறைந்தது 10 தொகுதிகளிலாவது நிற்க வேண்டும், 8 தொகுதிகளில் இருந்தாவது டெல்லிக்கு எம்.பிக்களை அனுப்பவேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். அதற்கு உடைந்து கிடக்கும் அதிமுகவுடன் மட்டும் கூட்டணி வைத்தால் வேலைக்கு ஆகாது என்றும் நினைக்கிறது பாஜக. அதற்காகவே, மெகா கூட்டணியை கட்டி எழுப்பும் முயற்சிகளில் இறங்கியுள்ளது பாஜக.

வெற்றியைத் தடுத்த அமமுக
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 25 தொகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணியின் வெற்றியை பதம் பார்த்தது அமமுக தான். தினகரனால், அதிமுகவின் வெற்றியும், கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தங்களுடைய வெற்றியும் பாதித்ததாக பாஜக கருதுகிறது. அதை உணர்ந்தே நாடாளுமன்றத் தேர்தலில், தினகரனையும் இணைத்துக் களம்காண விரும்புகிறது பாஜக தலைமை. சட்டமன்ற தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், 25 தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்தத் தொகுதிகளில் அமமுக பெற்ற வாக்குகள், திமுக கூட்டணி வேட்பாளரும், அதிமுக கூட்டணி வேட்பாளருக்கும் இடையேயான வித்தியாசத்தை விட வெகுவாக அதிகம்.

பேச்சைக் கேளுங்க
அமமுக மட்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் அந்த 25 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என்ற டேட்டா அப்போதே பாஜக கைக்குச் சென்றிருந்தது. ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம், திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் தான் அமமுக அதிக வாக்குகள் பெற்று, அதிமுகவின் வெற்றிக்கனி பறிபோவதற்குக் காரணமாக இருந்தது. கோவில்பட்டி தொகுதியிலும், கடம்பூர் ராஜூ கடைசி வரை போராடி ஜெயிக்க வேண்டி இருந்தது. பாஜக மேலிடம், 2021 தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க கடைசி வரை முயற்சி செய்தது. தினகரனும் அதற்கு சம்மதித்து அவருக்கு தேவையான தொகுதிகளைக் கேட்டார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. அதைச் சுட்டிக்காட்டியே, இப்போதாவது எங்கள் பேச்சைக் கேளுங்கள் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது பாஜக.

அதே திசை
2021 போன்ற நிலை 2024ல் வரக்கூடாது, அமமுகவால் தங்களது வெற்றியைப் பறிகொடுக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. எனவே, அதிமுகவின் அனைத்து சக்திகளையும் ஒரே கூட்டணியின் கீழ் கொண்டுவர திட்டமிடுகிறது பாஜக. அந்த திசையில் தான் தினகரனின் பேச்சும் இருந்து வருகிறது. அதிமுகவை மீட்டெடுப்போம், எடப்பாடி பழனிசாமி எனும் துரோகியின் முகத்திரையைக் கிழித்தெடுப்போம் என்றெல்லாம் வீரவசனம் பேசிக்கொண்டிருந்த தினகரன், இப்போது, திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்து வருகிறார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார்.

அமமுக
2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று ஐந்தரை சதவீத வாக்குகளைப் பெற்றது அமமுக. சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட எம்.பி தொகுதிகளில் லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது அமமுக. உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வெற்றியை பதிவு செய்தது அவரது அமமுக. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் 2.36% வாக்குகளை மட்டுமே அமமுக பெற்றது. தினகரன் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்ததற்கு இதுவும் முக்கிய காரணம். இனியும் தனித்துக் களமாடினால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்பதால், தனது அரசியல் வியூகங்களை தற்போது மாற்ற ஆரம்பித்துள்ளார் தினகரன்.

தடாலடியாக இறங்கி
2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வலுவாக எதிர்த்த தினகரன், இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் தயார் என்று சொல்லி வருகிறார். திமுக எனும் தீயசக்தியை அழிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம் என இறங்கி வந்திருக்கிறார் தினகரன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராகவே இருந்தோம். ஆனால், ஒரு சிலரின் சுயநலம், பேராசை காரணமாக அது முடியாமல் போனது என்று கூறி வருகிறார் டிடிவி தினகரன்.

எல்லாம் சரி - அந்த 8
எல்லாம் சரி, ஆனால், இப்போதுதான் அமமுக, பாஜக கூட்டணியில் இணைவதில் பல சிக்கல்கள் எழுந்திருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர். தமிழ்நாட்டில் 8 தொகுதிகளை தீவிரமாக குறிவைத்து வேலை செய்து வருகிறது பாஜக. அந்த 8 தொகுதிகளும் ஒரு திசை அல்லாமல், தங்களுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து வலுவானதாக பல ரிப்போர்ட்களின் அடிப்படையில் பாஜக தலைமை கண்டறிந்தவை. வடக்கில் 2, மேற்கில் 2, தெற்கில் 2, டீப் சவுத்தில் 2 என பாஜக தொகுதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த 8 தொகுதிகளிலும் கிட்டத்தட்ட வேட்பாளர் ரெடி என்ற அளவுக்கு இருக்கிறது பாஜகவின் வேகம்.

க்ளாஷ் ஆகும் 3
இந்த 8 தொகுதிகளில் பாஜக கடந்த முறை போட்டியிட்ட 5 தொகுதிகளுமே வருகின்றன. பல கணக்குகளைப் போட்டு பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ள இந்த தொகுதிகளில் தென் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளில் அமமுகவும் செல்வாக்கு மிக்கது. டிடிவி தினகரன், பாஜக - அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளைப் பெற திட்டமிட்டுள்ளாராம். அதில் 3 தொகுதிகள், ஏற்கனவே பாஜக தீவிரமாக வேலை செய்து வரும் தொகுதிகள். குறிப்பாக, டிடிவி தினகரன் போட்டியிட சிவகங்கை தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

சிவகங்கைக்கு தலை குறி
சிவகங்கை தொகுதியில் 2019 எம்.பி தேர்தலிலேயே அமமுகவின் தேர்போகி பாண்டி 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். உள்ளாட்சி தேர்தலிலும் , பல கவுன்சிலர்களைப் பெற்றது அமமுக. கண்ணங்குடி ஒன்றியத்தையும் கைப்பற்றியது. அதனால், கடந்த முறையே சிவகங்கை மாவட்டம் தினகரனின் ஆப்ஷனில் இருந்தது. எனினும் கோவில்பட்டிக்குச் சென்றார். இந்த முறை எம்.பி தேர்தலில் சிவகங்கையை குறி வைத்திருக்கிறாராம் தினகரன். ஆனால், சிவகங்கையை தங்களுக்காக தயார் செய்து வரும் பாஜக, தினகரனுக்கு தங்கள் தொகுதியை விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விட்டுக் கொடுக்குமா
சிவகங்கை மட்டுமல்லாமல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளும் டிடிவி தினகரனின் டார்கெட் லிஸ்ட்டில் இருக்கின்றன. இந்த தொகுதிகளிலும் பூத் கமிட்டி லெவலில் இறங்கி வேலை செய்து வரும் பாஜக, அவற்றை தினகரனுக்கு தாரை வார்க்க சம்மதிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி தான். அந்த தொகுதிகளை தினகரன் விரும்புவதை அறிந்துள்ள, அந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் பாஜகவினர், அமமுக கூட்டணியில் சேர்வதற்கே எதிராக பேசி வருகின்றனராம்.

ரைட்டு
சவுத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தால் போதும், தினகரன் தேவையில்லை, முக்குலத்தோர் வாக்குகளை இந்த முறை அள்ளி விடலாம், தினகரனுக்கு தொகுதிகளை தாரை வார்த்தால் நமது வெற்றி கவுண்ட் தான் குறையும் என்றெல்லாம் தமிழக தலைமைக்கு தூபம் போட்டு வருகிறார்களாம். இதனால், தென் மாவட்ட பாஜக வட்டாரத்தில் இப்போதே சீரியஸாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன. தினகரன் அணியில் சேர்வது ஒரு புறம் என்றால் இப்படி ஒரு பிரச்சனையா என தலையைச் சொறிகிறார்கள் தாமரைக் கட்சியினர்.












Click it and Unblock the Notifications