லாட்டரியை ஒழிக்கலாம்; திமுகவை அழிக்க முடியாது! : விஜய்க்கு சுப வீரபாண்டியன் சவால்
சென்னை: முதலமைச்சராவேன் என்று விஜய் சொல்வதுதான் ஒரு கட்சியின் கொள்கையா? என்று சுப வீரபாண்டியன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா. இந்த அறிவிப்புக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் பேசிய திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாதக் காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளோம்” என்றார்.

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்று நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுகிறது. அதை ஒழிக்க வேண்டும்’ என்று பேசி இருந்தார். கூடவே ஒரு நிறுவனம் '4ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறையைக் கட்டுப்படுத்தி வருகிறது’ என்றும் விமர்சித்திருந்தார்.
அந்தப் பேச்சு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. திமுகவினர் மட்டும் இல்லாமல் விசிக தலைவர் திருமாவளவன் உட்பட ஆளூர் ஷாநவாஸ், ரவிக்குமார், வன்னி அரசு உள்ளிட்டவர்கள் கண்டித்து இருந்தனர்.
இந்நிலையில், திமுக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழாவில் பேசிய சுப வீரபாண்டியன் மறைமுகமாக விஜய்யும் ஆதவ் அர்ஜுனாவையும் கடுமையாக விமர்சித்திருக்கிறர். அவர் பேசுகையில், “ஏதோ மன்னர் ஆட்சியை ஒழிக்கப்போகிறோம் என்கிறார் ஒருவர். கடந்த 2021 திமுக கூட்டணியிலிருந்து கொண்டே ஒருவர் இந்தக் கட்சியை அழிக்கப்போகிறேன் என்றார். அவருக்குத் தெரியாது திமுகவை ஒழிப்பது என்பது லாட்டரி சீட்டைபோல் எளிதான காரியம் அல்ல என்பது. துணை முதல்வர் உதயநிதி, 'நான் சினிமா செய்தியைப் பார்ப்பது இல்லை’ என்று சொன்னார். நான் அதை விளையாட்டுச் செய்தியாகத்தான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் யார் கட்சி தொடங்கினாலும் உடனே திமுகவை நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார்கள். நல்லது, அப்படித்தான் எதிர்க்கவேண்டும். தொடர்ந்து அவர்கள் எதிர்க்கட்டும். அப்போதுதான் திமுகவின் வெற்றி எளிதாக இருக்கும். நம்மை எதிர்க்கும் எல்லோருக்கும் முதலமைச்சர் ஆசை இருக்கிறது. 36 பேர் முதலமைச்சர் கனவுடன் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், திமுக தொடங்கும் போது தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படவில்லை. தேர்தல் என்ற சிந்தனையே இல்லாமல் தொடங்கப்பட்ட இயக்கம் திமுக. கட்சியில் சேர்ந்த உடனேயே நாளைக்கே அமைச்சர்களாகப் பதவிக்கு வந்துவிடுவோம் என்று நம்பி யாரும் இணையவில்லை. 1956இல் நடந்த தேர்தலில் 15 இடங்களை திமுக வென்றது. 1962இல் 50 இடங்களில் வென்றோம். படிப்படியாக நின்று ஆட்சிக்கு வந்தோம்.
ஆனால், இன்றைக்கு என்ன நிலை? கட்சி தொடங்கும்போதே, 'உங்கள் கொள்கை என்ன? ' என்று கேட்டால் உடனே, 'முதலமைச்சராவோம்’ என்கிறார்கள். முதலமைச்சராவோம் என்பது ஒரு கொள்கையா? அண்ணாதுரை, மு.கருணாநிதி என்ற இரண்டு பெரிய தலைவர்களை திமுக இழந்த பிறகும் இன்று ஆட்சிக்கு வந்துள்ளது. 75 ஆண்டுகளாக இந்தக் கட்சி தமிழ்நாட்டில் இருக்கின்றது.
1975இல் திமுக சந்தித்த நெருக்கடி நிலையைப்போல் வேறு எந்தக் கட்சியும் சந்தித்தது இல்லை. 13 ஆண்டுகளாக ஆட்சியில் திமுக இல்லை. அந்த நிலையை மாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துசேர்ந்தோம். 2001 மற்றும் 2014 தேர்தல்களில் திமுக வெற்றி பெறவே இல்லை. 2001இல் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார். அப்படியான நெருக்கடியைத் தாண்டி இன்று மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ள கட்சி திமுக. ஆகவே தோல்விகள் கடந்து வென்ற இயக்கம் திமுக" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications