கோவைக்கு பறந்த சீனியர் மாஜிக்கள்.. ‘சிக்கியதா?’ பரபர ஆலோசனை.. ‘உற்சாகம்’ குறையாத வேலுமணி! என்னாச்சு?
கோவை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சீனியர்கள் கோவையில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளிலும், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக ரெய்டுகளை நடத்தினர்.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 7 அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, ஆர்பி உதயகுமார் ஆகியோர் கோவை சென்று எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஒரே நேரத்தில்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மாநிலம் முழுவதும் 31 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதேபோல, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அவர் தொடர்புடைய இடங்கள் என 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. ஒரே நேரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குவிந்த தொண்டர்கள்
கடந்த அதிமுக ஆட்சியின்போது எல்இடி விளக்குகள் வாங்கியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 31 இடங்களில் சோதனை நடத்தினர். இதுகுறித்த தகவல் மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளிடையே பரவியது.

7 எம்.எல்.ஏக்கள்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், தாமோதரன் வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிர்வாகிகளில் சிலர் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி வேலுமணி வீட்டுக்குள் செல்ல முயன்றனர்.

கோஷம்
போலீசார் தடுத்ததால் வேலுமணியின் வீட்டின் முன்பு அமர்ந்து, போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். மேலும், திமுக அரசைக் கண்டித்தும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் கோஷம் எழுப்பினர். அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 250-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

400 பேர்
பின்னர் அவர்களை வாகனங்களில் ஏற்றி, குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று அங்கு தங்க வைத்தனர். தொடர்ந்து அங்கு அதிமுக நிர்வாகிகள் வந்து கொண்டே இருந்ததால், எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே செல்லாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வாறாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரண்டு வந்த அமைச்சர்கள்
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெற்றதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஆங்காங்கே இருந்து கோவைக்கு படையெடுத்தனர். எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்துப் பேசினர். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், அன்பழகன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

வாக்குவாதம்
அப்போது போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர் முதலில் பெண்களையும், அதைத் தொடர்ந்தும் ஆண்களையும் போலீசார் பிணையில் விடுவித்தனர்.

மீட்டிங்
தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தினர். ஒரே நாளில் இரண்டு மாஜி அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் குவிந்து வேலுமணியுடன் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனையின்போதும் எஸ்.பி.வேலுமணி கலக்கம் அடையாமல் உற்சாகமாகவே பேசியதாகக் கூறப்படுகிறது.

என்னாச்சு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில், ரூ.32.98 லட்சம் ரொக்கம்,1228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி கொஞ்சமும் உற்சாகம் குறையாமல் பேசியதும், மாஜிக்கள் பலர் ஒன்றுகூடி வேலுமணியுடன் ஆலோசனை நடத்தியதும் பல்வேறு கேள்விகளை அரசியல் அரங்கில் எழுப்பி வருகின்றன.












Click it and Unblock the Notifications