அண்ணா.. வாங்கணா எப்படி இருக்கீங்க.. 30 ஆண்டுகளாக மாறாத பழக்கம்.. விஜயால் நெகிழ்ந்த ரசிகர்
கோவை: முதலமைச்சரான பிறகு விஜய் முதல்முறையாக கோவை அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோவையில் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை சுமார் 10 கி.மீ தொலைவுக்கு அவர் ரோட்ஷோ சென்றார். அப்போது 30 ஆண்டுகள் விஜயின் ரசிகராக இருந்த ஒருவர் அவரை பார்த்து கையை காட்டினார். அவரை விஜய் அழைத்து பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் கோவை வந்திருந்தார். காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். கோவை விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை விஜய் ரோட்ஷோ வந்தார். விமான நிலையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அவரை பார்த்து கையசைத்தார். அப்போது விஜய் அவரை அருகில் அழைத்து சில நிமிடங்கள் பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

30 ஆண்டு பழக்கம்
இதுகுறித்து மேட்டுப்பாளையம் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ரங்கராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் தளபதியுடன் 30 ஆண்டுகளாக இருக்கிறேன். எங்கு படப்பிடிப்பு நடந்தாலும், எந்த நிகழ்வாக இருந்தாலும் செல்வேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தளபதியை பார்க்க முடியவில்லை. பார்டிகார்டுகள் எல்லாம் புதியவர்கள். அவர்களுக்கு தெரியாது. அதனால் கிட்டே நெருங்க முடியவில்லை. தளபதி எங்களை பார்த்தவுடன் கூப்பிட்டு சந்தோஷமாக பேசுகிறார். மேட்டுப்பாளையத்தில் பழைய ஆள் நான்தான். அது தலைவருக்கு தெரியும்.
நான் தூரத்தில் இருந்து டாடா தான் காட்டினேன். அவரே கூப்பிட்டு கண்ணாடியை இறக்கி, கதவை திறந்து தோள் மீது கைபோட்டு பேசினார். வீட்டில் அக்கா, குழந்தைகள், தம்பி, தங்கைகள் எப்படி இருக்காங்க என்று கேட்டார். அண்ணா எப்படி இருக்காங்க என்று தான் கேட்டார். அவர் என்னை அண்ணா என்று தான் கூப்பிட்டார். அக்கா, குழந்தைகள் எல்லாம் நன்றாக இருக்கிறார்களா என கேட்டார். கள நிலவரம் பரவாயில்லை என கேட்டார்.
சந்தோஷத்தின் உச்சம்
கட்சி ஆரம்பித்த பிறகு நம்மை ஓரம் கட்டுகிறார்கள். மரியாதை இல்லைங்க என்று கூறினேன். இந்த நிகழ்ச்சியில் நான் பேச முடியாது. தனிப்பட்ட முறையில் பேசுகிறேன் என்று கூறினார். நான் பேசிவிட்டு சொல்கிறேன் என்று கூறினார். என்னை கூப்பிட்டு பேசியதற்கே மிகவும் சந்தோஷமாக உள்ளது. எப்படி இருந்தாலும் பரவாயில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இருக்கிறார். முதலமைச்சராக அவர் பேசவில்லை. மேட்டுப்பாளையம் ரங்கராஜ் அண்ணா என்று தான் பேசினார். மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நம்மளை ஓரம்கட்டிய மகராசர்கள் எல்லாம் பார்த்துக்கட்டும். தலைவர் நம்மை எப்படி வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளட்டும். சந்தோஷமாக பார்த்து அதற்கு தகுந்தபடி செய்யட்டும். நான் பார்த்துக்கறேன். நீங்க நல்லா இருங்க என்றார். ஆண்டவன் புண்ணியத்தில் அவரும் நல்லா இருக்கட்டும். நானும் நன்றாக இருப்பேன். நல்லதே நடக்கும்" என்றார்.



Click it and Unblock the Notifications
