வினேஷ் போகத் போல.. தடை அதை உடை! மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோயம்புத்தூர்: தமிழ்ப் புதல்வன் திட்டத் தொடக்க விழாவில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை குறிப்பிட்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி ஒரு நாட்டின் சொத்தாக கருதப்படுகிறதோ அதேபோலதான் அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் நாட்டின் சொத்தாக கருத வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மட்டுமல்லாது அரசு கல்வி நிறுவனங்களை பலப்படுத்த வேண்டும் என்றும், அதில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனை நிறைவேற்றும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இது குறித்து விடுக்கப்பட்டிருந்த செய்தி குறிப்பில், "தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ல் தொடங்கிவைத்தார். இதுவரை இத்திட்டத்தின்கீழ் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கும் இந்த கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம் மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இதற்காக ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூரில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத்தை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டியிருந்தார்.
அதாவது, "ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பலவீனமாக வீட்டிற்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் கொண்ட பெண்ணாக போராடி நாம் அனைவரும் பாராட்டும் அளவிற்கு கொடி கட்டி பறக்கிறார்.
தடைகள் என்பது உடைத்தெறியத்தான். தடைகளை பார்த்து ஒருபோதும் சோர்ந்துவிடக்கூடாது. வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். உங்கள் மேல் உங்களைவிட நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு பின் உங்கள் பெற்றோர் மட்டுமல்ல திமுக அரசும் உள்ளது. வரலாற்றில் என்றைக்கும் நம்ம பெயரை சொல்லப் போகிறத் திட்டமாக அது இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக உருவாகியுள்ள 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications