கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்.. முடங்கும் வளர்ச்சி.. கோவையை காப்பாற்றுமா தவெக?
கோவை: குறு சிறு நடுத்தர தொழில்கள் நிறைந்தது கோவை. பம்ப், கிரைண்டர், ஆட்டோமொபைல் தொடங்கி ரோபோடிக் இயந்திரம் வரை கோவையின் உற்பத்தி திறன் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைகிறது. அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல உள்கட்டமைப்பு தடையாக உள்ளது. புறவழிச்சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ என கோவையின் கனவு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை என பல்வேறு பிரிவுகளில் கோவை முன்னேற்றமடைகிறது. ஆனால், அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதி செய்யப்படவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை பொள்ளாச்சி சாலை, தடாகம் சாலை என அனைத்து பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கோவை புறவழிச்சாலைகள்
இதை சரி செய்வதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. முறையான திட்டமிடலுடன் கட்டவில்லை. அதனால் போக்குவரத்து நெரிசல் குறையில்லை. திமுக ஆட்சியில் ஒரே ஒரு மேம்பாலம் மட்டுமே கட்டப்பட்டது. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், ரயில் நிலையம் விரிவாக்கம், ஒருங்கிணைந்த பேருந்து முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. உள்கட்டமைப்பு முடங்கியுள்ளது.
கோவை மாநகர், புறநகர் போக்குவரத்தை எளிதாக்க மேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. மைல்கல் முதல் நரசிம்பாளையம் வரை புறவழிச்சாலை அமைப்பதுதான் திட்டம். மேற்கு புறவழிச்சாலை மைல்கல் முதல் மாதம்பட்டி வரையிலான முதல் கட்ட திட்டம் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 2 மற்றும் 3 ஆம் கட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிகுறியே இல்லை.
மேம்பாலங்கள்
இதேபோல மதுக்கரையில் தொடங்கி பெரியநாயக்கன்பாளையம் வரை கிழக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை நடைபெறவில்லை. 2 முக்கியமான புறவழிச்சாலைகள் டேக் ஆப் ஆகாததால் குண்டும் குழியுமான சாலைகளில் தான் மக்கள் பயணிக்கிறார்கள். தமிழகத்திலேயே மிகவும் நீளமான மேம்பாலமான ஜி.டி நாயுடு மேம்பாலம் (10 கி.மீ) பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
திமுக ஆட்சியில் அந்த மேம்பாலத்தை நீலாம்பூர் வரை 5 கி.மீ தொலைவுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்தனர். அந்த திட்டத்துக்கான பணியும் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. ஏற்கனவே உள்ள அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தை மேம்படுத்தும் திட்டமும் செயல்படுத்தவில்லை. சிங்காநல்லூர், லாலிரோடு, சுந்தராபுரம், சரவணம்பட்டி பகுதிகளில் மேம்பாலம் கட்டப்படும் என்று அதிமுக ஆட்சியிலேயே அறிவிப்பு வெளியானது. அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
மெட்ரோ திட்ட அறிக்கை
எல் அண்ட் பைபாஸை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வற்கான பணியும் ஆய்வு நிலைலேயே நிற்கிறது. உப்பிலிபாளையம் ரவுண்டானா மேம்பாட்டு திட்டமும் டேக் ஆப் ஆகவில்லை. கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இதுவரை தமிழக அரசு 2 முறை அனுப்பிய திட்ட அறிக்கையையும் மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதிலும் முன்னேற்றமில்லை.
இதனால் தொழில்துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தொழில்துறையினர், "இந்தியளவில் அதிக கவனம் ஈர்க்கும் இரண்டாம் கட்ட நகரமாக கோவை உள்ளது. தசாப்தமாக இழுத்து கொண்டிருந்த விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு இப்போது தான் நிதி ஆயோக் ஒப்புதல் வழங்கியுள்ளது. சிங்காநல்லூர், சுந்தராபுரம் மேம்பாலம் திட்டங்கள் ஆய்வு நிலையில் உள்ளன.
வேகம் போதாது
இந்த வேகம் போதாது. புனே, கொச்சி என பல இரண்டாம்கட்ட நகரங்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன. அவர்களை விட அதிக திறன் இருந்தும் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், கோவை வளர்ச்சி தடைபடுகிறது. இதேநிலை நீடித்தால் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மத்திய மாநில அரசுகள் தாமதப்படுத்தாமல் கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்" என்றனர்.


Click it and Unblock the Notifications
