அண்ணாமலைக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யமாட்டோம்.. பாமக நிர்வாகிகள் அதிரடி அறிவிப்பு! அரண்டு போன பாஜக!
கோவை: கோவை தொகுதி பாஜக வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சார பணிகளில் இருந்து விலகுவதாக கோவை மாவட்ட பாமகவினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் பாஜக 20 இடங்களிலும் பாமக 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கோவையில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்து வருகின்றன.
பாமக நிர்வாகிகள் அதிரடி முடிவு: இந்தநிலையில், தேர்தல் பணிகளில் இருந்து வெளியேறுகிறோம் என்று கோவை பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ், பாமக மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா ஆகியோர் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அண்ணாமலைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் கூட்டணி கட்சியான பாமக, திடீரென தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

பாமக மா.செ கோவை ராஜ் அறிவிப்பு: இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள கோவை பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ், பாமக மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா, “கோவை வேட்பாளர் பாமக அலுவலகம் பக்கம் வரவில்லை. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவுக்கு அழைப்பும் இல்லை. வேட்புமனு தாக்கலுக்கும், தேர்தல் அலுவலக திறப்பு விழாவிற்கும் பாமகவுக்கு அழைப்பு இல்லை.
அண்ணாமலை பக்கத்துல நிற்கிறாரே.. கோவையில் மும்பை எம்.எல்.ஏ கேப்டன் தமிழ்ச்செல்வன்.. யார் இவர்?
எந்த ஒரு பிரச்சாரத்திற்கும், தேர்தல் வாக்குறுதி வெளியிடும் நிகழ்ச்சிக்கும் பாமகவுக்கு அழைப்பு இல்லை. கூட்டணி தர்மம் முக்கியம்தான். அதைவிட சுயமரியாதை முக்கியம். கூட்டணி கட்சித் தலைவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மெளனமாய் வெளியேறுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
விலக காரணம்: பிரச்சாரத்தில் இருந்து வெளியேற காரணங்களையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி,
1. வேட்பாளர் பாமக அலுவலகத்துக்கு வரவில்லை.
2. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவை அழைக்கவில்லை. 6 தொகுதியில் இரண்டு தொகுதிக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது.
3. வேட்பு மனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை.
4. தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு பாமகவை அழைக்கவில்லை.
5. எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் இதுவரை அழைக்கவில்லை.
கோவையில் ஐஐஎம் கொண்டு வருவேன்: 100 வாக்குறுதிகளை வெளியிட்ட அண்ணாமலை! 500 நாளில் நிறைவேற்றுவதாக உறுதி
6. தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு நிகழ்ச்சிக்கு பாமகவுக்கு அழைப்பில்லை.
7. கூட்டணி தர்மம் முக்கியம் தான், ஆனால் அதைவிட சுயமரியாதை முக்கியம்.
8. கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை, ஏறக்குறைய கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில் தான் உள்ளனர்.
9. கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய் வெளியேறுகிறோம்.
அதிர்ந்த பாமக, பாஜக: பாஜக மாநில தலைவர் போட்டியிடும் கோவை தொகுதியில் பாமக மாவட்ட செயலாளரின் இந்த அறிவிப்பால், பாஜக, பாமக கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இரு கட்சிகளின் தலைமை ஆலோசித்து அடுத்தகட்ட முடிவை தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. பாஜக - பாமக கூட்டணிக்குள் கோவையில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தேர்தல் களத்தில் அதிர்வலைகளை கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications