ஓபிஎஸ் அன்று ஏற்படுத்திய காயம் ஆறாது.. எந்த ஒட்டு உறவும் கிடையாது.. பொள்ளாச்சி ஜெயராமன் உருக்கம்!
கோவை : தனது தந்தை கருணாநிதியின் பக்தர் என்று சட்டப்பேரவயில் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாகத் தெரிவித்தது அதிமுகவினர் மனதில் என்றும் ஆறாத காயமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தக் காயத்திற்கு எந்த மருந்தும் இல்லை. எனவே, ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுக தொண்டர்களுக்கு இனி எந்த ஒட்டும், உறவும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார் பொள்ளாச்சி ஜெயராமன்.
மேலும், பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு இடைக்காலத் தீர்ப்பு தான் என்றும், மேல்முறையீட்டில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சியை அடுத்த சின்னநெகமம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.9 லட்சம் செலவில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி, பணிகளை தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

திமுக அரசு
அப்போது பேசிய அவர், பொள்ளாச்சியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மேற்கு புறவழிச்சாலை உள்பட பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் பொதுமக்கள், தொழில் முனைவோர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க தமிழக அரசு கொள்முதல் நிலையங்களுக்கு உத்தரவிட வேண்டும்." எனத் தெரிவித்தார்.

திமுகவுடன் நெருங்கிய உறவு
மேலும் பேசிய அவர், "அதிமுக எனும் இயக்கம் திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் நெருங்கிய உறவுடன் உள்ளதால் அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இந்த தீர்ப்பு என்பது ஒரு இடைக்காலத் தீர்ப்பு. மேல்முறையீட்டு மனு மீது ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களின் மனநிலை தீர்ப்பாக கிடைக்கும். வரக்கூடிய தீர்ப்பு, எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் மானசீகமாக வாழ்த்தும் வகையில் நல்ல தீர்ப்பாக அமையும்.

ஒட்டு உறவு கிடையாது
தனது தந்தை கருணாநிதியின் பக்தர் என்று 234 சட்டமன்ற உறுப்பினர்களும் கூடியிருந்த சட்டப்பேரவயில் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாகத் தெரிவித்தது அதிமுகவினர் மனதில் என்றும் ஆறாத காயமாக உள்ளது. இந்தக் காயத்திற்கு எந்த மருந்தும் இல்லை. எனவே, அவருடன் அதிமுக தொண்டர்களுக்கு இனி எந்த ஒட்டும், உறவும் ஏற்படாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications