திணறிய கோவை.. கொங்கு பெல்ட்டில் ஸ்டாலினின் அதிரடி மூவ்.. "2026" கொடி பறக்குமா?.. கலக்கத்தில் அதிமுக
கோவை: மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய 55 ஆயிரம் பேர் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்தனர்.
4 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு சென்றுள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இதில் அதிமுகவிலிருந்து விலகி ஆறுகுட்டி, தேமுதிகவிலிருந்து விலகி பணபடடி தினகரன், பாஜகவின் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

55 ஆயிரம் பேர்
இவர்கள் மட்டும் அல்லாமல் கொங்கு மண்டலத்தில் இருந்து 55,000 பேர் திமுகவில் இணைந்தனர். அதிமுக, அமமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து இவர்கள் இணைந்தனர். இதற்காக ஒரு விழாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இவர்கள் எல்லாம் திமுகவில் இணைந்தனர். கொங்கு மண்டலம் என்பது எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னை மண்டலத்தில் பெரும்பாலான இடத்தை தன் வசமாக்கிக் கொண்ட திமுகவால் கொங்கு மண்டலத்தில் சோபிக்க முடியவில்லை.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலத்தை சேர்ந்தவரான செந்தில் பாலாஜியிடம் அந்த மண்டலத்தை கொத்தாக திமுக பக்கம் சாய்க்க அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி அவரும் மாற்றுக்கட்சிகளில் அதிருப்தியில் உள்ளவர்களை திமுகவில் இணைத்து வந்தார். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதிருப்தியிலும் விரக்தியிலும் இருப்போரை திமுகவுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகறது.

ஆறுகுட்டி
அதன்படிதான் ஆறுகுட்டி உள்ளிட்டோர் இணைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவுக்கு அதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் நிச்சயம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த கொங்குவில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர் ஆகிய 11 மக்களவை தொகுதிகள் உள்ளன.

கொங்குவில் திமுக
கடந்த மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே மொத்தமாக அள்ளியது. ஆனால் தமிழகத்தில் உள்ள 68 கொங்கு மண்டல சட்டசபை தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கூட்டணியும் 24 தொகுதிகளை திமுக கூட்டணியும் பெற்றது. அதிலும் கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கப்பட்டன.

2026 சட்டசபை தேர்தல்
எனவே வரும் 2026 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தின் மொத்தம் உள்ள 68 தொகுதிகளையும் திமுக தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கான பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டம்தான் 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தது. திமுகவின் இந்த மூவ்வால் அதிமுக, பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக கொடி நாட்டுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications