வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்நிலையில் வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக அண்ணாமலை இன்று தொகுதியில் தனியாக பிரச்சாரம் செய்யவுள்ளார்.
பாஜக சார்பில் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த ஒரு வாரமாக அவர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். வேட்புமனு தாக்கலுக்கே ராஜஸ்தான் முதலமைச்சர், அண்ணாமலை ஆகியோரை அழைத்து பிரம்மாண்ட பேரணி நடத்தினார். வானதியை எதிர்த்து திமுக மாவட்ட செயலாளர் துரை செந்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

வானதி உடல்நலக்குறைவு
அவருக்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக பிரச்சாரம் செய்கிறார். கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அதன் அருகிலேயே இருப்பால் வடக்கு தொகுதியிலும் தாக்கம் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் வானதி சீனிவாசன் தன்னுடைய வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். வானதிக்காக நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அங்கு பிரச்சாரம் செய்கிறார்.
பியூஷ் கோயல் தொழில்துறையினருடன் உரையாடும் நிகழ்ச்சி நேற்று காலை ரேஸ்கோர்ஸில் நடைபெற்றது. இதில் வானதியும் கலந்து கொண்டார். அதன் பிறகு வடக்கு தொகுதியில் அவர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென வானதிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை நலம் விசாரிப்பு
இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், "தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவரின் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் வானதி சீனிவாசனின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உடல் நிலை சரியானதும் வானதி மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்" என்றனர்.
இந்த தகவலை அறிந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு மருத்துவமனை சென்று வானதியை நலம் விசாரித்தார். வானதியை ஆதரித்து அண்ணாமலை இன்று கோவை வடக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில் ரத்தினபுரி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் உடல் நலக்குறைவால் இதில் வானதி கலந்து கொள்ள மாட்டார்.
தனியாக பிரச்சாரம்
அதேநேரத்தில் வானதிக்காக அண்ணாமலை அங்கு தனியாக பிரச்சாரம் செய்யவுள்ளார். மேட்டுப்பாளையம் ரோடு, கண்ணப்பன் நகர், சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை இன்று காலை வானதிக்காக பரப்பரையில் ஈடுபடவுள்ளார். அவருடன் அதிமுக மற்றும் பாஜகவினரும் இணைந்து பிரச்சாரம் செய்யவுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications
